Published:Updated:

`எங்களுக்கு மரியாதையே இல்ல; தினகரன் சொன்னது என்னாச்சு!'‍- அ.ம.மு.க-வில் எழும்பும் குமுறல்

`எங்களுக்கு மரியாதையே இல்ல; தினகரன் சொன்னது என்னாச்சு!'‍- அ.ம.மு.க-வில் எழும்பும் குமுறல்
`எங்களுக்கு மரியாதையே இல்ல; தினகரன் சொன்னது என்னாச்சு!'‍- அ.ம.மு.க-வில் எழும்பும் குமுறல்

``மற்ற கட்சிகளில் இருந்தபோது கிடைத்த முக்கியத்துவம், அங்கீகாரம்கூட அ.ம.மு.க-வில் கிடைக்கவில்லை. உண்மைய சொல்லப்போனா, மரியாதையே இல்ல” என அ.ம.மு.க-வில்  உள்ள நாயக்கர் சமுதாயத்தினரின் புலம்பல்கள் எதிரொலிக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் விதிமுறைகளும் அமல்படுத்தபட்ட நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றுவருகிறது. டீக்கடைகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் தேர்தல்குறித்த பேச்சுக்களே எதிரொலிக்கின்றன. தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க, தே.மு.தி.க.  காங்கிரஸ் , பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் வரிசையில் அ.ம.மு.க-வும் தனி இடத்தைப் பிடித்துள்ளது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகளாகச் செயல்பட்டுவரும் அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ளவர்கள். அங்கீகரிக்கப்படாதவர்கள் அ.ம.மு.க-வில் இணைந்துள்ளனர்.  

அ.ம.மு.க சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட டி.டி.வி.தினகரன், பிறகு அ.ம.மு.க-வில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ”அ.ம.மு.க-வில் முக்குலத்தோர்களுக்குதான் அதிக முக்கியத்துவமும் பொறுப்புகளும் அளிக்கப்படுகிறது. நாயக்கர் சமுதாயத்தினர் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் போல இருக்கிறோம்” என கட்சிகளுக்குள் புலம்பல்கள் எதிரொலிக்கின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக உள்ள நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என குமுறல்கள் எழுகின்றன.

இதுகுறித்து அ.ம.மு.க வட்டாரத்தில் பேசினோம், “ அ.தி.மு.க-விற்கு இணையான கட்சியாக அ.ம.மு.க-வை நினைக்கிறோம். அதனால்தான், அ.தி.மு.க மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளில் இருந்தும் உறுப்பினர்கள் அ.ம.மு.க-வில் இணைந்துள்ளனர். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நாயக்கர் சமுதாயத்தினரின் ஓட்டுகள் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளன. அ.தி.மு.க, ம.தி.மு.க, தி.மு.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகளில் உள்ள நாயக்கர் சமுதாயத்தினர், ஆர்வத்துடன் அ.ம.மு.க-வில் இணைந்தனர். ஆனால், நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு, தகுதிக்கேற்ற பொறுப்புகளோ, பதவிகளோ வழங்கப்படலை.

மற்ற கட்சிகளில்கூட முக்கியதும் அளிக்கப்பட்டிருக்கு. உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவை அ.தி.மு.க-வில் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸில், வடக்கு மாவட்ட தலைவராக கதிர்வேல் உள்ளார். ஆனால், அ.ம.மு.க-வில் குறிப்பிட்டுச் சொல்லும் பொறுப்புகளில் முக்கியத்துவம் இல்லை என்பதுதான் வேதனையாக உள்ளது. மற்ற கட்சிகளில் இருந்தபோது, மாவட்ட அளவிலான பதவி வகித்தவர்களுக்குக்கூட ஒன்றிய அளவிலான பதவிகள் வழங்கப்படவில்லை.

இதனால் தகுதியான, தேர்தல் களத்தில் பணி செய்யகூடியவர்கள் ஒதுங்கியே இருக்கிறார்கள். பொறுப்புகளோ, அங்கீகாரமோ அளிக்கப்பட்டால்தானே அந்தந்த சமுதாய மக்களின் ஓட்டுகள் பிறழாமல் கிடைக்கும். இப்படி புறக்கணித்தால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காவிட்டாலும் அங்கீகாரமாவது கொடுக்க வேண்டாமா? உண்மைய சொல்லப்போன எங்க சமுதாயத்தினருக்கு மரியாதையே இல்ல. மற்ற கட்சிகளில் எப்படியோ, அ.ம.மு.க-வில் உறுப்பினர்களுக்கு தகுதிக்கு ஏற்ற அங்கீகாரம் உண்டு என அடிக்கடி சொல்லும் தினகரனின் வாக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை” என்றனர்.

இந்நிலையில், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.20 கோடி பேர் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். எங்களுக்கு எந்த அரசியல் கட்சியும் மரியாதை தருவதில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறோம். தேர்தல் தொடங்க உள்ள நிலையில், எங்கள் சமுகத்தினர் அதிகம் வசிக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க வேண்டும். சீட் கொடுக்கும் கட்சிக்கு எங்களது முழு ஆதரவையும் வழங்குவோம். அக்கட்சி வெற்றி பெறச்செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவோம்” என திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.