`இதை டோக்கனாக வச்சுக்கங்க, அப்புறம் வேற தர்றோம்!' - இரவில், வீடுவீடாக குக்கரைக் கொடுத்த அ.ம.மு.கவினர் | Lok sabha Elections 2019 TTV Dhinakaran Followers Issues Cooker in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:13 (16/03/2019)

`இதை டோக்கனாக வச்சுக்கங்க, அப்புறம் வேற தர்றோம்!' - இரவில், வீடுவீடாக குக்கரைக் கொடுத்த அ.ம.மு.கவினர்

நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தஞ்சாவூரில் அ.ம.மு.கவினர் ஓட்டுக்காக வீட்டுக்கு வீடு குக்கர் மற்றும் வேட்டி சட்டை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமமுகவினர் விநியோகித்த குக்கர்

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை கடந்த ஞாயிறு மாலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிடப் போகும் கட்சிகளிடம் கூட்டணிப் பேச்சு வார்த்தையை முடித்து விட்டு எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. மேலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன.

அமமுகவினர் வழங்கிய குக்கர்

அனைத்துக் கட்சிகளும் இன்னும் சில தினங்களில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன. அதன் பிறகு உடனே வாக்கு கேட்டு பிரசாரத்தை தொடங்க உள்ளன. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தஞ்சாவூரில் நகரப் பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வீட்டுக்கு வீடு குக்கர் கொடுத்துள்ளனர். இது அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சிலரிடம் பேசினோம். ``தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு முழுமையாக ஒரு நாள்தான் முடிந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே  நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டது. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருள்கள் கொடுப்பது தடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்து செயல்பட்டு வருகிறது. ஆனால், அ.ம.மு.க-வினர் நேற்றிலிருந்து தஞ்சையின் நகரப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு குக்கர் கொடுத்து வருகின்றனர். 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட குக்கர் சீல் பிரிக்கப்படாமல் பெட்டியோடு அப்படியே கொடுத்துள்ளனர். 

அதோடு தேர்தல் தேதி அறிவிக்கப்படுதற்குச் சில தினங்களுக்கு முன் ரெடிமேட் சட்டை ஒன்றும் வேட்டியும் வீட்டுக்கு வீடு கொடுத்துள்ளனர். இதற்காக தஞ்சை ஞானம் நகர்ப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குக்கர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கட்சி பேதமில்லாமல் அனைவருக்கும் குக்கரைக் கொடுத்து வருகின்றனர் அ.ம.மு.க வினர். குக்கர்தான் டோக்கன் இதை முதலில் புடிங்க அப்புறம் ஓட்டுக்குப் பணம் தானாக வந்து சேரும் என வாக்காளர்களிடம் குக்கரைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர். இது அ.தி.மு.க, தி.மு.க நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. அந்த அளவுக்குக் கச்சிதமாக வேலை செய்து தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள் கில்லாடி எனப் பெயரெடுத்துள்ளனர்.

ஐஎஸ்ஐ முத்திரையுடன் குக்கர்

ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்த விவகாரம் வெளியே தெரிந்ததால் இப்போது நூதன முறையில் குக்கரையே டோக்கனாகக் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.கவினரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் மூலம் ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 வரை தர இருக்கிறோம் என வாக்காளர்களிடம் பேசி வருகிறார்கள்'' என்றனர். குக்கர் பெற்றுக்கொண்ட பெண்மணி ஒருவரிடம் பேசினோம். ``தினகரன் கட்சிக்காரங்க நேற்றிரவு எங்க பகுதிக்கு வந்து குக்கர் கொடுத்தாங்க. இதை டோக்கனாக வச்சுக்கங்க, அப்புறம் வந்து ஓட்டுக்குப் பணம் தரோம். இதை வெளியில் சொல்லிக்காதீங்க எனக் கூறிவிட்டுச் சென்றனர்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close