``அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே வளர்ச்சிபெற்று இருக்கிறார்கள்” - பிரகாஷ்காரத் | Cuddalore Neyveli CPM Meeting News

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:21 (16/03/2019)

``அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே வளர்ச்சிபெற்று இருக்கிறார்கள்” - பிரகாஷ்காரத்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம்  நடந்தது. இதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்துகொண்டு பேசினார். 

பிரகாஷ்காரத்

அப்போது, ``பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்வோம்,  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்போம் எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துத் தேர்தலை சந்தித்தது. ஆனால், மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு, 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.

இதனால், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பு இன்றி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கவும், நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குக் கொடுக்கவும் எடுத்துக்கொண்ட  முயற்சி காரணமாக, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து நிலை தொழிலாளர்களும்,  அனைத்து மாநில விவசாயிகளும், மாணவர்களும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது, அரசின் வீழ்ச்சியை நமக்கு வெளிப்படுத்துகிறது. 

இந்தியாவில், 6 விமான நிலையங்கள் எந்த முன் அனுபவமும் இல்லாத தனியார் நிறுவனமான அதானி குழுமத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியில், அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து போராடிவருகின்றனர்.  மோடி அரசு ஒட்டு மொத்தமாகத் தோல்வியடைந்திருக்கிறது.  மதவாதத்திற்கு  எதிராகவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்க மோடி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதேபோல, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மோடி அரசுக்கு எதிராக மற்ற அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர். எனவே, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.  


[X] Close

[X] Close