Published:Updated:

ஜாதகத்தைப் பார்த்தார்... வேட்பாளர்களை மாற்றினார்... அ.ம.மு.க பட்டியலுக்கு சசிகலா ஒப்புதல்

ஜாதகத்தைப் பார்த்தார்... வேட்பாளர்களை மாற்றினார்... அ.ம.மு.க பட்டியலுக்கு சசிகலா ஒப்புதல்
ஜாதகத்தைப் பார்த்தார்... வேட்பாளர்களை மாற்றினார்... அ.ம.மு.க பட்டியலுக்கு சசிகலா ஒப்புதல்

தமிழகத் தேர்தல் களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தோழி ஜெயலலிதாவுடன் சேர்ந்து தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என பிசியாக அரசியல் செய்துவந்தார் சசிகலா. ஆனால் இன்று, சசிகலா  சக பெண் கைதியுடன் சிறையில் பகடி விளையாடியபடி நாள்களைக் கடந்துவருகிறார். சசிகலா முன்பு போல இப்போது இல்லை. சசிகலாவுக்கு சிறை வாழ்க்கை இயல்பான ஒரு வாழ்க்கையாகவே மாறிவிட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவரைப் பற்றி உணர்ந்துள்ள சிறை அதிகாரிகளோ, `சசிகலாவின் இந்த பகடி விளையாட்டு எல்லாம் மனரீதியாக ரிலாக்சேஷன் செய்ய மட்டுமே. அவரின் முழுக் கவனமும் தமிழகத் தேர்தல் களத்தின் மீதுதான் உள்ளது. கடந்த முறை டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது, ஆளும் கட்சி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கவிடாமல் செய்தது. அப்போது, மாற்றுச் சின்னத்தைத் தேர்வு செய்வதில் தினகரன் குழப்பம் அடைந்தார். கடைசி நேரத்தில் தனது வழக்கறிஞர் மூலம் சசிகலாதான் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்யும்படி அறிவுறுத்தினார் என்பதை நினைவுபடுத்தினர்.  

இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை இறுதிசெய்வதற்காக, இன்று நண்பகல் 12.20 மணிக்கு சசிகலாவைச் சந்தித்து, தினகரன் ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பின்போது, விவேக், ராஜராஜன், பெருமாள் மற்றும் வழக்கறிஞர் அசோகன் உடன் இருந்தனர். அப்போது விவேக், தினகரன் மீது புகார் தெரிவித்து, தேனி மக்களவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால் டி.டி.வி.தினகரனோ, தேனி தொகுதி தங்க தமிழ்ச்செல்வனுக்குக் கேட்பதாகவும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்தார். விவேக் உள்ளிட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டு, சீல் வைக்கப்பட்டிருந்த அ.ம.மு.க வேட்பாளர்கள் பட்டியலை வழக்கறிஞர் அசோகனிடமிருந்து தினகரன் வாங்கிக் கொடுத்தார். அதில், வேட்பாளர்களின் ஜாதகம், சுய விவரங்கள் இருந்தன. ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேரை தினகரன் பரிந்துரை செய்திருந்தார். அதில், சசிகலா 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் மாற்று வேட்பாளர்களை, சாதக பாதகங்களை தினகரன் எடுத்துக்கூறி, சில மாற்றங்களைச் செய்து ஒப்புதல் அளித்தார். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரை மாற்றும்படி ஆலோசனை கூறி, அ.ம.மு.க வேட்பாளர் பட்டியலை சசிகலா இறுதிசெய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில், தொப்பி சின்னத்திற்கு ஏற்பட்ட சிக்கலைப் போல, தற்போது குக்கர் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று தினகரனிடம் சசிகலா கேட்டபோது, தேர்தல் ஆணையம் தேர்வுசெய்துள்ள சின்னங்களில் 4 சின்னங்களைத் தேர்வுசெய்து கொடுத்து, இந்த நான்கு சின்னங்களில் ஒன்று கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.