Published:Updated:

அ.தி.மு.க கூட்டணி எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்? - உளவுத்துறை கொடுத்த `ஷாக்' ரிப்போர்ட் 

அ.தி.மு.க கூட்டணி எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்? - உளவுத்துறை கொடுத்த `ஷாக்' ரிப்போர்ட் 
அ.தி.மு.க கூட்டணி எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்? - உளவுத்துறை கொடுத்த `ஷாக்' ரிப்போர்ட் 

தமிழகத்தில், அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்ற தகவலை உளவுத்துறை ரிப்போர்ட்டாக சமர்பித்துள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும் எதிர்க்கட்சியான தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகியவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளன. ஜெயலலிதாவைப் போல, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உளவுத்துறையை நம்பி இந்த முறை வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். இதற்காக, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்ற ரகசிய ரிப்போர்ட் உளவுத்துறை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், அ.தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 19 தொகுதிகளின் கள நிலவரங்களைச் சுட்டிக்காட்டி ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அதுபோல, மாநில உளவுத்துறையும் மத்திய அரசுக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படலாம். கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் என  அ.தி.மு.க தலைமை ஆலோசனை நடத்தியது. அதில், என்னென்ன தொகுதிகள்  என முடிவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க கட்சித் தலைமை, தொகுதிப் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க தரப்பில் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கடலூர் ஆகிய தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் அல்லது அவரின் மனைவி செளமியா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் வடிவேல் ராவணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சாம்பால், மாநில துணைப் பொதுச்செயலாளர் திலகபாமா, டாக்டர்  வைத்திலிங்கம், டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி. பேராசிரியர் தன்ராஜ் ஆகியோரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று பா.ம.க தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் அல்லது செளமியா தருமபுரியிலும் ஏ.கே.மூர்த்தி அரக்கோணத்திலும் வடிவேல் ராவணன் விழுப்புரத்திலும் சாம்பால் மத்திய சென்னையிலும், கடலூரில் கோவிந்தசாமி அல்லது தன்ராஜ் ஆகியோர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆரணியிலும் ஸ்ரீபெரும்புதூரிலும் யார் வேட்பாளர் என்பது முடிவாகவில்லை. உளவுத்துறை ரிப்போர்ட்டின்படி, கடலூரில் கோவிந்தசாமியைவிட தன்ராஜை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தத் தொகுதிகளின் கள நிலவரத்தை உளவுத்துறை அறிக்கையாக அ.தி.மு.க-விடம் சமர்பித்துள்ளது. பா.ம.க-வுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் உள்ளடி வேலை காரணமாக சிக்கல் என்று ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தே.மு.தி.க-வை பொறுத்தவரை திருச்சி, கள்ளக்குறிச்சி, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகள் இறுதியாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் அல்லது கிருஷ்ணகிரி என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க சார்பில் திருச்சியில் டாக்டர் இளங்கோவன், கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் அல்லது வெங்கடேஷ்,  வடசென்னையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு இல்லை என்பதை கட்சித் தலைமை சூசகமாகத் தெரிவித்துள்ளது. இதனால், மாநில நிர்வாகிகளுக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பளிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் தே.மு.தி.க கரைசேர வாய்ப்புள்ளதாக ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளது. 

புதிய நீதிக்கட்சியைப் பொறுத்தவரை ஏ.சி.சண்முகம் வேலூரில் போட்டியிட உள்ளார். புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரை கிருஷ்ணசாமி, தென்காசி தொகுதியில் போட்டியிட உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், தஞ்சாவூரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம்,  தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. தூத்துக்குடியில் தமிழிசை சௌந்தர்ராஜன், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூரில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் கறுப்பு முருகானந்தம் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. வேட்பாளர் தேர்வுகுறித்து பா.ஜ.க தலைமை தீவிர ஆலோசனையில் உள்ளது. 

அ.தி.மு.க 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில், தற்போதைய சிட்டிங் எம்.பி-க்களில் திருவள்ளூர் தொகுதி டாக்டர் வேணுகோபாலுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என்ற  எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், உளவுத்துறை ரிப்போர்ட்டில் நல்ல பெயரை வாங்க கடும் போட்டிநிலவுகிறது. இதற்கிடையில் தி.மு.க கூட்டணி சார்பில் யார் யார் போட்டியிட உள்ளனர் என்ற தகவலையும் உளவுத்துறை அனுப்பியுள்ளது. அதற்கேற்ப, அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர். மேலும், உளவுத்துறை சுட்டிக்காட்டிய சாதக பாதக சூழ்நிலைகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப தேர்தல் வியூகம் அமைக்கும் திட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் உள்ளன. 

நேர்காணலின்போது, இந்தத் தேர்தலில் ஜெயலலிதா நம்மோடு இல்லை. இருப்பினும், 40 மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.  ஓரங்கப்பட்ட சசிகலா குடும்பத்தினரால் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிகள் சிதற வாய்ப்புள்ளது. டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்துறையின் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில் 5 அல்லது 6 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தற்போதையை அரசியல் சூழ்நிலையை மாற்றுவது தொடர்பான ஆலோசனையில் அ.தி.மு.க தலைமை பா.ஜ.க-வுடன் ஈடுபட்டுள்ளது. 

 மத்திய, மாநில உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்த ஒருபக்கம் ஆலோசனை நடந்தாலும் வாரிசுகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரலும் அ.தி.மு.க-வில் பரவலாகக் கேட்கிறது.