"15 லட்சியம்... 3 நிச்சயம்!" டி.டி.வி.தினகரனின் மாஸ்டர் பிளான் | dinakaran master plan for upcoming elections

வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (15/03/2019)

கடைசி தொடர்பு:12:39 (16/03/2019)

"15 லட்சியம்... 3 நிச்சயம்!" டி.டி.வி.தினகரனின் மாஸ்டர் பிளான்

தினகரன்

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்தும் வேலையில் தீவிரம்காட்டிவரும் நிலையில், சத்தமே இல்லாமல் தினகரன் தரப்பு தேர்தல் வேலையை வேகப்படுத்தியுள்ளது.

 தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இதுவரை எஸ்.டி.பி.ஐ கட்சி மட்டுமே கூட்டணி வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறும் என்பதைவிட, எத்தனை தொகுதிகளில் ஆளும்கட்சியின் வெற்றியையும் எதிர்க்கட்சியான தி.மு.க-வின் வெற்றியையும் பாதிக்கும் என்கிற கணக்கே அனைவரிடத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வாக்கு சதவிகிதம்தான் தினகரனின் எதிர்கால அரசியலையும் தீர்மானிக்கப்போகிறது என்பதால் அவரும் மிகவும் கவனமாக இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். 

இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளோடு தேர்தல் வேலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரம் இல்லாமலே தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்துவிட்டார் தினகரன். குறிப்பாக, இன்னும் இரண்டு நாள்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார். இரண்டு கட்டமாக இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து வேட்பாளர் தேர்வு குறித்து இறுதி முடிவை எடுத்துவிட்டார் தினகரன். அந்தப் பட்டியலை இறுதி செய்யும் வேலைகளும் முடிந்துவிட்டது. 
இதுகுறித்து தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, “நிதி நெருக்கடியால் தினகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை அவதிப்பட்டு வந்தார். ஆனால், சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு, நிதி பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டுவிட்டது. குறிப்பாக, 40 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டாலும், அதைச் சந்திக்கும் வகையில் அவருடைய நிதி ஆதாரம் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் எந்தெந்தத் தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது குறித்தும், எந்தத் தொகுதியில் கணிசமான அளவில் வாக்குகளை அள்ளலாம் என்றும் ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதினைந்து தொகுதிகளைத் தினகரன் தரப்பு குறிவைத்துள்ளது. இந்தப் பதினைந்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும்விதத்தில் தினகரன் தரப்பு இருக்கும் என்று குறித்துள்ளார்கள். அந்தப் பதினைந்து தொகுதிகளிலும் வலுவான, வளமான வேட்பாளரை நிறுத்த உள்ளார்.

இதைத்தாண்டி மூன்று தொகுதிகளில் வெற்றியை ஈட்ட முடியும் என்று தினகரன் உறுதியாக நம்புகிறார். அந்தத் தொகுதிகள் முறையே சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் தேனி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று உறுதியாகத் தினகரன் நம்புகிறார். சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே போட்டி நிலவ உள்ளது தங்களுக்கு சாதகமாகவும், முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக இருப்பது தங்களுக்குச் சாதகமாகப்பார்க்கிறது. அதேபோல், ராமநாதபுரமும் முக்குலத்தோர் வாக்குகள் வலுவாக இருப்பதும் கட்சிக்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதையும், தேனியில் பன்னீர் மீது இருக்கும் அதிருப்தி தனக்குச் சாதகமாக மாறிவிடும் என்று கணக்குப்போடுகிறார் தினகரன். 

தினகரன்


இந்த மூன்று தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளிடம் எப்படியும் இந்த மூன்று இடங்களில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தினகரன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தவிர, அனைத்துத் தொகுதிகளுக்கு கட்சியிலிருந்து கணிசமான அளவில் செலவு செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. ஆர்.கே.நகர் பாலிஸியில் தினக்கூலியில் வாக்கு சேகரிப்பு முதல், பூத் ஏஜென்ட் வரை நியமிக்க உள்ளார்கள். இதனால் கட்சியினர் உற்சாகம் குறையாமல் வேலை செய்வார்கள் என்று கணக்குப் போடுகிறார் தினகரன்” என்கிறார்கள். 

தினகரன் தரப்பு ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும்பட்சத்தில் தமிழக தேர்தல் களத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். குறிப்பாக, தி.மு.க வெற்றிபெறும் தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை பெறவும், அ.தி.மு.க வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெறும் நிலையையும் தினகரனின் அ.ம.மு.க ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் அந்தக் கட்சியினர். எங்கள் இலக்கு வெற்றி அல்ல, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி நாங்கள் என்பதைத் தமிழகத்துக்கு காட்டவே இந்தத் தேர்தலைப் பயன்படுத்தப்போகிறோம் என்கிறார்கள். 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close