Published:Updated:

விஜயகாந்த்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பது ஏன்? - இழுபறியில் 2 தொகுதிகள் 

விஜயகாந்த்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பது ஏன்? - இழுபறியில் 2 தொகுதிகள் 
விஜயகாந்த்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பது ஏன்? - இழுபறியில் 2 தொகுதிகள் 

தே.மு.தி.க-வின் பொதுச் செயலாளர் விஜயகாந்த்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக சந்தித்துவருகின்றனர். அதற்கு பின்னணியில் தொகுதி இழுபறியே காரணம் என்கின்றனர் கட்சியினர்.  

வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது, என்னென்ன தொகுதிகள் என்று இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகே தே.மு.தி.க. இடம் பெற்றது. 

இந்தச் சூழ்நிலையில் விஜயகாந்த்தின் வீட்டுக்குச் சென்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். உடல் நலம் பாதிப்புக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த்திடம் நலம் விசாரிக்கச் சென்றதாகத் தகவல் சொல்லப்பட்டது. இன்று முதல்வரும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த்தைச் சந்தித்தார். ஏற்கெனவே கூட்டணி தொடர்பாக துணை முதல்வரும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் விஜயகாந்த்தை சந்தித்தனர். திருநாவுக்கரசர், ரஜினி, ஸ்டாலின், சரத்குமார் ஆகியோர் விஜயகாந்த்தைச் சந்தித்தனர். அரசியல் மற்றும் உடல் நலத்தை விசாரித்ததாக அவர்கள் பேட்டியளித்தனர். 

கூட்டணி இறுதியான பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ராமதாஸ் விஜயகாந்த்தைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் ஒரு தொகுதியில் நிலவும் இழுபறிதான் முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த்தைச் சந்தித்த ராமதாஸ், ``விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். எங்களின் சந்திப்பு நல்லபடியாகவே முடிந்தது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசவில்லை" என்று கூறினார். 

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி,  கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி என 20 தொகுதிகளிலும் பா.ம.க.வை பொறுத்தவரை மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை பொறுத்தவரை கோயமுத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தொகுதிகளை இறுதி செய்வதில் அ.தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடித்துவருகிறது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர், ``விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி, வடசென்னை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். வடசென்னையை விட கிருஷ்ணகிரியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் வடசென்னைக்குப்பதில் கிருஷ்ணகிரியை கேட்டுள்ளோம். அதுதொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவிட்டு வந்த விஜயகாந்த்தை கூட்டணிக்கு முன்பும் பிறகும் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் சந்தித்துவருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் என்ற தகவல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் பா.ம.க. போட்டியிட விரும்புகிறது. அதை பா.ம.க.வுக்கு விட்டுக் கொடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஏற்கெனவே பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று விஜயகாந்த்தும் பிரேமலதா விஜயகாந்த்தும் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனால் தே.மு.தி.க. போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற தேர்தல் வியூகங்களை அமைத்துவருகிறோம்" என்றார். 

அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றாலும் அதன்செயல்பாடுகளால் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. அதை சரிசெய்யும் நோக்கத்தில்தான் விஜயகாந்த்துடன் சந்திப்பு நடந்துவருகிறது. தொகுதிகளை இறுதி செய்வதில் நிலவும் இழுபறிகளை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். தே.மு.தி.க-வின் பிடிவாதத்தால் என்னென்ன தொகுதிகள் என்று அறிவிக்க முடியாத சூழல் உள்ளது. அ.தி.மு.க. போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம். வேட்பாளர்கள் தேர்வும் நடந்துவருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும்" என்றார். 

 பா.ம.க. தரப்பில் பேசியவர்கள், ``அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் தே.மு.திகவும் இணைந்தாலும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம்தான். இதனால் ஓட்டுகள் சிதறி கூட்டணி வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றன. இதனால்தான் தே.மு.தி.க. தலைமையிடம் பேசிவருகிறோம். இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெறும் சூழல் உள்ளது" என்றனர். 

தே.மு.தி.க.வை பொறுத்தவரை விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர்தான் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ளனர். அதனால்தான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த்தின் உடல் நலத்தை காரணம் காட்டி அவரின் வீட்டுக்கு படையெடுத்துவருவதை `கேப்டன் என்றால் மாஸ்' என்று தே.மு.தி.க. தொண்டர்கள் கருதிவருகின்றனர். ராமதாஸ் விஜயகாந்த்தைச் சந்தித்தபோது பா.ம.க.வினருடன் அ.தி.மு.க.வினரும் சென்றனர். எதிரும் புதிருமாக இருந்த பா.ம.க., தே.மு.தி.க.வை இணைந்து தேர்தலில் பணியாற்ற வைக்க அ.தி.மு.க. தலைமை எடுத்த முடிவுதான் இது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.