Published:Updated:

''மகள் நிச்சயதார்த்தத்துக்கு வாங்கிய கடன், கணவர் கருமாதிக்குச் செலவாயிடுச்சே!''

எழிலக தீ விபத்து... கலங்கி நிற்கும் குடும்பம்

''மகள் நிச்சயதார்த்தத்துக்கு வாங்கிய கடன், கணவர் கருமாதிக்குச் செலவாயிடுச்சே!''

எழிலக தீ விபத்து... கலங்கி நிற்கும் குடும்பம்

Published:Updated:
##~##

சில மாதங்களுக்கு முன்பு ஆயிரம் விளக்குப் பகுதியில் கெமிக்கல் கிடங்கு ஒன்றில் தீ விபத்து. அங்கு தீயில் சிக்கிய நான்கு பேரை தனி ஆளாக மீட்டவர் அவர்! 

சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடி அருகே நடந்த ஒரு தீ விபத்தில், எரிந்து கொண்டு இருந்த கடைக்குள் மயங்கிக் கிடந்த எட்டு வயதுச் சிறுமியை மீட்டவரும் அவரே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீ விபத்தின் போது முதல் ஆளாக உள்ளே செல்லும் முன்னணித் தீத்தடுப்பு வீரர் யார் என்று அந்தத் துறையில் கேட்டால் சொல்லப்படும் முதல் பெயர்  அன்பழகன்!  இன்று உயிரோடு இல்லை. இந்த ஆண்டு இவருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை எழிலகத் தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீரமரணம் அடைந்து விட்டார்!

''மகள் நிச்சயதார்த்தத்துக்கு வாங்கிய கடன், கணவர் கருமாதிக்குச் செலவாயிடுச்சே!''

ஆனால், அவரது குடும்பத்தின் நிலைதான் கேள்விக்குறியாகி இருக்கிறது. அன்பழகனுக்கு மூன்று பெண்கள். ஒரு மகன். மூத்த மகள் ஷர்மிளா பி.பார்ம் படித்துள்ளார். இரண்டாவது மகள் ஷீலா பி.பி.ஏ-வும், மூன்றாவது மகள் ஷாலினி எம்.எஸ்.சி., எம்.பில்.லும் படித்துள்ளனர். கடைசி மகன் சங்கர் தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் பொறியியல் படித்து வருகிறார். இவரது மனைவி அமுதா. மொத்தக் குடும்பமும் அன்பழகனின் அரசுச் சம்பளத்தை மட்டுமே நம்பி இருந்தது.

''மகள் நிச்சயதார்த்தத்துக்கு வாங்கிய கடன், கணவர் கருமாதிக்குச் செலவாயிடுச்சே!''

இது குறித்துப் பேசும் சக ஊழியர்கள், ''இத்தனை வருஷம் சர்வீஸுல இருந்தும் அவர் சொந்தமா ஒரு

''மகள் நிச்சயதார்த்தத்துக்கு வாங்கிய கடன், கணவர் கருமாதிக்குச் செலவாயிடுச்சே!''

வீடுகூட வாங்கலை. அவர் வாங்குன சம்பளம் அத்தனையும் நாலு பிள்ளைங்களோட படிப்புக்கே செலவு செய்தார். நாங்க ஏதாச்சும் அறிவுரை சொன்னாக்கூட 'படிப்பைத் தவிர பெரிய சொத்து என்ன இருக்கு பங்காளி? அதுங்க படிச்சு நல்ல நிலைமைக்கு வரட்டும்’னு சொல்வார். அவருக்குக் கவர்மென்ட் குவார்ட்டர்ஸ் கூட கிடைக்கலை. சைதாப் பேட்டையில்  வாடகை வீட்டுல இருந்தார். சம்பளம் பிடித்தம் போக 17 ஆயிரம் கிடைக்கும். வாடகையைக் கொடுத்துட்டு மொத்த குடும்பச் செலவையும் கடன் வாங்கித்தான் சமாளிச்சார். சமீபத்துல பையனை இன்ஜினீயரிங் காலேஜுல சேர்க்க மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல செலவாச்சு.

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளில் ஜூனியர் களை ரிஸ்க் எடுக்க விடாம... தன்னோட உடம்புக்கு நெருப்பு வெச்சிக்கிட்டு அணைக்கச் சொல்வார். உடம்புக்கு முடியாத நிலைமையிலும் வேலைக்கு வருவார். 'ரெஸ்ட் எடுங்க; நாங்க பார்த்துக்கிறோம்’னு சொன்னாக்கூட கேட்க மாட் டார். பொங்கல் அன்றைக்கு அவரை லீவ் எடுத்துக்கச் சொன்னோம். ஆனா, ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு, வீட்டுக்குப்போய் சாமி கும்பிட்டு விட்டு வந்துட்டார். அன்னைக்கு ராத்திரி 12.30 மணிக்கு எழிலகத்துல தீ விபத்துன்னு  போனை அட்டெண்ட் பண்ணதும் அவர்தான். எல்லாத்தையும் உசுப்பி விட்டுட்டு கிளம்பினவரை, இப்படி பிணமா பார்ப்போம்னு எதிர்பார்க்கலை...'' என்று, கதறுகிறார்கள் சோகத்துடன்.

''மகள் நிச்சயதார்த்தத்துக்கு வாங்கிய கடன், கணவர் கருமாதிக்குச் செலவாயிடுச்சே!''
''மகள் நிச்சயதார்த்தத்துக்கு வாங்கிய கடன், கணவர் கருமாதிக்குச் செலவாயிடுச்சே!''

கடந்த செவ்வாய் கிழமை அன்பழகனின் உடல் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வரும் 29-ம் தேதி அவரது மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தம். அன்பழகனின் மனைவி அமுதாவிடம் பேசினோம். ''மூத்த பொண்ணுக்குக் கல்யாணம் தடைபட்டால் அடுத்தடுத்த பொண்ணுங்க வாழ்க்கையையும் அது பாதிக்கும். அதனால, மாப்பிள்ளை வீட்டுல நிச்சயதார்த்தம் தடைப்பட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நிச்சயதார்த்தச் செலவுக்காக ஒரு வாரம் முன்னாடி ஆபீஸுல 40 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கினார். அந்தக் காசு அவரோட இறுதி சடங்குக்கே சரியாப் போச்சு. அவர் பேங்குலகூட நூத்து சொச்சம் ரூபாய்தான் பேலன்ஸ் இருக்கு. நிச்சயதார்த்தத்துக்கு, கல்யாணத்துக்குன்னு அவர் எங்கே, யார்கிட்டே பணம் சொல்லி வெச்சி இருந்தார்னு தெரியலைங்க. நாங்க கவர்மென்ட் குவார்ட்டர்ஸ்ல இருந்தாலாவது பரவாயில்லை. இனிமே அவர் இல்லாம வீட்டு வாடகை, பையன் படிப்புச் செலவு எல்லாம் எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியலை...'' என்று கண்ணீர் வடித்தார்.

தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் தீயணைப்பு அதிகாரி ப்ரியா ரவிச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர் முருகன் ஆகியோர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ப்ரியாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். ''ப்ரியா அடிக்கடி, 'தீயணைப்புத் துறையில வேலை பார்க்க கொடுத்து வெச்சிருக்கணும். எத்தனை பேரைக் காப்பாத்த முடியுது’ன்னு பெருமையாச் சொல்வாங்க. இந்த விபத்துக்கு அப்புறம்கூட எனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு அவங்க அழலை. அன்பழகன் சாருக்கு இப்படி ஆகிப்போச்சேன்னுதான் புலம்புறாங்க...'' என்கிறார்.

இந்தத் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படங்கள்: கே.கார்த்திகேயன்,

கரு.முத்து 

ஆரம்பம் முதல் அழிவு வரை ஊழல்!

புனித ஜார்ஜ் கோட்டையை பார்த்துவிட்டு, அதன் அருகிலேயே தனக்கும் அப்படி ஒரு கட்டடம் வேண்டும் என்று கேட்டார், எட்டாம் ஆற்காடு நவாப் வாலாஜா. ஆனால், வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் மன்னருக்கு கட்டடம் கட்டிக் கொடுக்க விரும்பவில்லை ஆங்கிலேயர்கள். அதனால், பிளாக்கர்ஸ் டவுன் என்றழைக்கப்பட்ட இடத்தில் வாலாஜா மன்னருக்கு கோட்டைக்கு பதில் கால்சா மஹால் என்ற அரண்மனையை 1768-ல் கட்டிக் கொடுத்தது கிழக்கிந்திய கம்பெனி. அதுதான் இந்த எழிலகம்.  இந்தக் கட்டடம் கட்டிக் கொடுத்ததன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருந்தது. கட்டடம் கட்டிய வகையில் மன்னரால் கொடுக்கவே முடியாத அளவுக்கு... மிகப்பெரிய தொகையான 425 மில்லியன் இந்தியன் பகோடாஸ் (ரூபாய் போல) கேட்டது கிழக்கிந்திய கம்பெனி.

அதிர்ச்சி அடைந்த மன்னர் இதில் பெரும் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்ட, இதை விசாரிக்க கமிட்டியும் அமைக்கப்பட்டது. விசாரணையில், 200 மில்லியன் பகோடாஸ் தள்ளுபடி செய்யப்பட்டு, மீதம் 225 மில்லியன் பகோடாஸ் மட்டும் கொடுத்தால் போதும் என்று தீர்ப்பு அளித்தது ஆங்கிலேய அரசு. ஆனால், மன்னரால் அதைக்கூட கொடுக்க முடியாமல் ஒரிஸாவில் இருந்து தமிழகம் வரையில் தனது ஆளுகையில் இருந்த கோரமண்டலப் பகுதியை ஆங்கிலேயரிடம் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று! அதே கவலையில் சில ஆண்டுகளில் மன்னர் இறந்தும் போனார்.

1850-ல் அந்த அரண்மனையை ஆங்கிலேயர் எடுத்துக் கொண்டனர். இப்படி ஊழல் சர்ச்சையில் எழுந்த கட்டடம், தற்போது தீயில் எரிந்து போனதுக்கும் ஊழல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கட்டடத்தில் இருந்த அனைத்து ஆவணங்களும் எரிந்து விட்டதால் தொழில் வணிகத்துறை மற்றும் சமூக நலத்துறையின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன.