``நான் ஜெயித்துவிட்டேன்”- வைகோ சொன்ன காரணமும்... உற்சாகத்தில் தொண்டர்களும்! | vaiko happy about dmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:31 (19/03/2019)

``நான் ஜெயித்துவிட்டேன்”- வைகோ சொன்ன காரணமும்... உற்சாகத்தில் தொண்டர்களும்!

வைகோ

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ம.தி.மு.க என்ற கட்சியை வைகோ தொடங்கியபோது தமிழகம் முழுவதும் அவருக்கு எழுந்த உற்சாக வரவேற்பும், ஆதரவும் அடுத்தடுத்த காலங்களில் மங்கிப் போனது. ஒருகட்டத்தில் `கலைஞரின் போர்வாள்'என்று வர்ணிக்கப்பட்ட வைகோ, `அட்டகத்தியாக மாறிவருகிறார்' என்ற விமர்சனங்களும் எழுந்தன. ``சரியான நேரத்தில் தவறான முடிவெடுக்கும் அரசியல் தலைவர் வைகோ” என்று அவருடன் பயணித்த கட்சியினரே புலம்பும் நிலை இருந்தது. ஆனால், ``கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அடிக்கடி உணர்ச்சிவசப்படும் வைகோ மிகவும் நிதானமாக எடுத்த ஒரு முடிவு என்றால் அது ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராகவும் தி.மு.க வின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டதுதான்” என்கிறார்கள் ம.தி.மு.கவினர். தி.மு.க வுடன் கூட்டணிக்கு முன்பாக, அதே தி.மு.க வினர் வைகோ மீது வைத்த விமர்சனங்களுக்கு இப்போது தனது சகாக்களிடம் பதில் சொல்லிவருகிறார் வைகோ.

வைகோ

ஆம்! அரசியலில்தான் ஜெயித்துவிட்டதாக சமீபத்தில் சிலாகித்துப் பேசியுள்ளார் வைகோ. காரணம் இதுதான். தி.மு.க கூட்டணியில் வைகோ ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியை மட்டும் பெற்றியிருக்கிறார். ஆனால், தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டதும் ஸ்டாலினைச் சந்தித்த தி.மு.க வேட்பாளர்கள் அடுத்த சந்திக்க விரும்பி தலைவராக வைகோ இருந்ததே. கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா என தி.மு.க வின் முன்னணி வேட்பாளர்கள் அனைவரும் வைகோ-வை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் வைகோ ``என்னைத் துரோகி என்றும், துரோகசாமி என்றும் ஒரு கட்டத்தில் விமர்சித்தவர்கள். பெட்டி வாங்கிக்கொண்டு தி.மு.க -வை காலி செய்ய முடிவு செய்துவிட்டேன் என்றும் சொன்னார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று என் வீடு தேடியும், தாயகத்திற்கும் வந்து சந்திக்கிறார்கள். இதுவே நான் அரசியலில் ஜெயித்ததற்கு சமம்தான். என்னை நான் நிரூபித்துவிட்டேன்” என்று உணர்ச்சி பெருக்குடன் சொல்லியுள்ளார். வைகோவின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ``உப்பும் வைரமும் ஒன்றாகவே தெரியும். ஆனால் வைகோ வைரம் என்பது இப்போது புரியும். பழி சுமத்தியவர்களே எங்கள் தாயகம் நாடி வருகிறார்கள்... உண்மை எப்போதுமே நின்றுதான் வெல்கிறது என்பது மீண்டும் உறுதியாகிறது!! ஆனால், அதற்காக நாங்கள் கண்ட இழப்புகள் விலை மதிப்பற்றவை" என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.