குமரவேலைத் தொடர்ந்து கடலூர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மேலும் 2 நிர்வாகிகள் விலகல்! | Cuddalore Kamal Party Resignation News

வெளியிடப்பட்ட நேரம்: 07:35 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:34 (19/03/2019)

குமரவேலைத் தொடர்ந்து கடலூர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மேலும் 2 நிர்வாகிகள் விலகல்!

கடலூரைச் சேர்ந்தவர் சி.கே. குமரவேல். இவர் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் கடலூர், நாகை மாவட்டப் பொறுப்பாளாராக இருந்தார். மேலும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

குமரவேல்

இந்த நிலையில், `கட்சியில் அனைத்தும் முரண்பாடாக நடந்து வருகிறது, கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்திக்க முடியவில்லை. அவர்கள் பிடித்தவர்கள் மட்டுமே அவரைச்  சந்திக்க முடிகிறது. அவர்கள் சொல்வதைத்தான் அவர் கேட்டு முடிவு எடுக்கிறார். மற்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில், இன்னமும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. நேர்காணலில் நான் கலந்துகொண்டேன். நான் கலந்துகொள்ளவில்லை எனக் கூறுவது தவறு. கட்சி மையக்குழு பணியை தொடங்குபடி கூறியதால்தான் தொடங்கினேன்.

விலகிய மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள்

நேற்று கட்சியில் சேர்ந்த கோவை சரளா நேர்காணல் நடத்துகிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் கட்சியிலிருந்து வெளியேறினேன்' எனக் கூறி, கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். `கட்சித் தலைமை வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் கடலூர் வேட்பாளர் எனக் கூறி வெளியிட்டுள்ளார். கட்சிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்' எனக் கூறி அவரது ராஜினமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டப்  பொறுப்பாளராக உள்ள வெங்கடேசன், கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன்கார்த்திக் ஆகிய 2 பேரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

 

 

 ராஜினமா

 

 

மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் தனது ராஜினாமா கடிதத்தில், `நானும் சி.கே.குமரவேலும் 32 ஆண்டுக்கால நண்பர்கள். அவர் மூலமாகக் கட்சியில் இணைந்து மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்தேன். அவர் கட்சியிலிருந்து விலகியதால் நானும் மாவட்ட பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன்' எனக் கூறியுள்ளார். கடலூரில் ஒரே நாளில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து 3 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ள சம்பவம் கட்சியிரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.