`அரசியலுக்கு வந்துட்டா இதையெல்லாம் தாங்கி கொள்ளணும்!'- ரூ.298 கோடி கடன் குறித்து அமமுக வேட்பாளர் | Bank Loan allegation against AMMK Candidate Murugesan

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:12 (25/03/2019)

`அரசியலுக்கு வந்துட்டா இதையெல்லாம் தாங்கி கொள்ளணும்!'- ரூ.298 கோடி கடன் குறித்து அமமுக வேட்பாளர்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக பி.ஆர்.சி.முருகேசன் என்பவரை அறிவித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். இவர் வங்கி ஒன்றில் ரூ.298 கோடி கடன் பெற்று கொண்டு திருப்பி செலுத்தவில்லை என சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ``கல்லூரியின் பெயரின் 2,000 கோடி சொத்து இருக்கு. நான் எதற்கு ஏமாற்ற போகிறேன்'' என கூலாக சொல்கிறார் முருகேசன். இந்த விவகாரம் தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினகரன்

தஞ்சாவூர்  நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் வேட்பாளராக பி.ஆர்.சி.முருகேசன் என்பவரை நிறுத்தியுள்ளார் டி.டி.வி தினகரன். அ.தி.மு.க-வில் இருந்தபோதும் இப்போது அ.ம.மு.க-வில் இருக்கும் போதும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே கட்சியில் இருந்துள்ளார். இவர் தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி என கல்வி நிறுவனங்களை சிறந்த அளவில் நடத்தி வருகிறார். தஞ்சாவூர் வல்லம் பகுதியில் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி என்கிற பெயரில் பெரிய அளவில் கல்லூரி நடத்தி வருகிறார். மன்னார்குடியை பூர்வீமாக கொண்ட இவர் சசிகலாவின் உறவினர் என வெளியில் பேசப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க-வில் இருந்த காலத்தில் இருந்தே இவர் பலமுறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டு முயற்சி செய்து வந்தார். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருக்கு ஒருமுறை கூட வாய்ப்பளிக்கவில்லை. ஏன் என்றால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பிய வண்ணமே இருக்கும். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்பதால் ஜெயலலிதா இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். மேலும் தஞ்சாவூருக்கு இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தஞ்சாவூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சுமார் 298 கோடி கடன் பெற்று திருப்பி கட்டாமல் ஏமாற்றி வருகிறார் என்ற செய்தி வேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக வேட்பாளர் பி.ஆர்.சி.முருகேசன்

இது குறித்து அ.தி.மு.க-வை சேர்ந்த அரவிந்தராஜ் என்பவரிடம் பேசினோம். ``பி.ஆர்.சி.முருகேசன் ஆரம்பகாலத்தில் கல்வி நிறுவனம் நடத்தி வந்தவர். இன்று பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகம் அளவில் உயர்ந்து கோடீஸ்வரனாக வலம் வருகிறார். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு உரிய அனுமதி பெறாமல்  இவர் நடத்திய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு எதிராக அதில் படித்த மாணவிகள் போராட்டமே நடத்தினர். வல்லத்தில் கல்லூரி கட்டடம் கட்டியவருக்கு பணம் தராமல் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் இவர் இந்தியன் வங்கி ஈஸ்வரி நகர் கிளையில் கல்லூரியின் பெயரில் 298 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை.

வங்கி நிர்வாகம் வட்டியுடன் சுமார்  301 கோடி கட்ட வேண்டும் என  இவரை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செய்திதாள்களில் விளம்பரமும் செய்துள்ளது. இந்த தேர்தலில் பெரிய அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் நினைக்கிறார். அதற்காகவே சர்ச்சைகளுக்கு பெயர் போன இவரை காஸ்ட்லி வேட்பாளராக அறிவித்துள்ளார். தன் கையில் கரையை வைத்துக்கொண்டு அ.தி.மு.க-வை பற்றி விமர்சனம் செய்வது எந்த விதத்திலும் சரியே இல்லை. அமமுக வேட்பாளர்களை தோற்கடித்து பாடம் புகட்டுவதே எங்கள் வேலை'' என்றார்.

அ.தி.மு.க-வை சேர்ந்த அரவிந்தராஜ்

இது குறித்து அமமுக வேட்பாளர் பி.ஆர்.சி.முருகேசனிடம் பேசினோம். ``கடின உழைப்பின் மூலம் கல்லூரி சொத்தை 2,000 கோடிக்கு உயர்த்தியுள்ளேன். ட்ரஸ்டின் பெயரில் இவை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அரசியலில் போட்டியிடுவது என்பது வேறு வங்கியில் கடன் வாங்குவது என்பது வேறு.ரூ.2,000 கோடிக்கான சொத்தை அடமானமாக வைத்தே வங்கியில் கடன் பெற்றுள்ளேன். கடனை கட்டவில்லை என்றால் அவற்றை விற்று வங்கிக்கடனை எடுத்து கொள்ளும். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனை பொறுத்து கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். அரசியலுக்கு வந்துட்டா இதை எல்லாம் தாங்கி கொள்கிற மன தைரியம் வேண்டும். இதை ஒரு பொருட்டாக நினைக்காமல் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருகிறோம்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க