`ஐந்து கன்ஃபார்ம்; நான்கில் சிக்கல்' - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு என்ன காரணம்? | congress candidate list will release on march 22

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:24 (25/03/2019)

`ஐந்து கன்ஃபார்ம்; நான்கில் சிக்கல்' - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு என்ன காரணம்?

காங்கிரஸ்

 

தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, தொகுதிகளை முடிவுசெய்வதில் காட்டிய இழுபறியை இப்போது வேட்பாளர் அறிவிப்பிலும் காட்டிவருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் வேட்புமனு தாக்கலும் துவங்கிவிட்டது. தி.மு.க கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தையும் ஆரம்பித்துவிட்டார். ஆனால், இதுவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டபோது, “ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இன்னும் நான்கு தொகுதிகளுக்குத்தான் இழுபறியாகிவருகிறது.

நாகர்கோவில் தொகுதிக்கு பலத்த போட்டி உள்ளது. அதேபோல, கிருஷ்ணகிரி தொகுதிக்கு இளங்கோவனும், செல்லக்குமாரும் மோதுகிறார்கள். அதேநேரம், சிவகங்கைத் தொகுதி கார்த்திக் சிதம்பரத்திற்கு உறுதியான நிலையில், அதைத் தடுக்க ஒரு டீம் டெல்லியில் முகாமிட்டுள்ளது. இதனால், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்குச் சென்றுள்ளார்கள். அதேபோல, தேனிக்கும் சில நெருக்கடிகள் உள்ளன. இளங்கோவனுக்கு சீட் கொடுக்கப்போவதில்லை என்ற நிலையில்தான் இப்போது வேட்பாளரைத் தேர்வுசெய்வதில் இழுபறியாகிக்கொண்டிருக்கிறது. தி.மு.க தரப்பிலிருந்து விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுமாறு காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இப்போது உள்ள சூழ்நிலையில், வரும் 22-ம் தேதி அன்றே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலை உள்ளது” என்கிறார்கள்.