``நம்மை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்!” - கடலூர் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு | PMK leader Ramadoss Election propaganda in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:39 (25/03/2019)

``நம்மை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்!” - கடலூர் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு

ராமதாஸ்

கடலூர் பா.ம.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அருண்மொழித்தேவன் முன்னிலை வகித்தார். பா.ம.க மாநிலத்துணை தலைவர் பழதாமரைக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். இதில் பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கடலூர் மக்களவை தொகுதி பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் வரும் மக்களவை தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால் நம்மை எதிர்த்து போட்டி இடுபவர்கள் டெபாசிட் வாங்கக் கூடாது. அ.தி.மு.க என்றவுடன் நமது நினைவுக்கு வருவது சத்துணவுத் திட்டம்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 69 சதவிகித இடஒதுக்கீடு செய்து சமூக நீதி காத்த வீராங்கனையாகத் திகழ்ந்தார். இதில் தி.மு.கவின் பங்கு எதுவும் கிடையாது. பா.ஜ.க அரசில் வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது அந்த ஆட்சியில் 6 ஆண்டுகள் பங்கு பெற்றோம். அப்போது தமிழக வாழ்வாதாரம் மேம்பட நல்ல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தி.மு.க தமிழகத்துக்கு எதையும் சாதிக்கவில்லை.

அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, தேமு.தி.க கூட்டணி வெற்றிக் கூட்டணி இந்தக் கூட்டணி 40 மக்களவை தொகுதி மட்டுமல்லாமல் 18 சட்டப்பேரவை தொகுதியிலும் வெற்றி பெறும். நாம் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இந்தக் கூட்டணியில் சேர்ந்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் வறுமை ஒழிப்புத் திட்டமாக ஏழைகளுக்கு ரூ.1500 தருவதாகக் கூறியுள்ளனர். இது அருமையான திட்டம். ஏற்கெனவே, பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். 8 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சியை யாரும் குறை சொல்லாத அளவுக்குச் சிறப்பாக நடந்து வருகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெண்களைப் பாதுகாக்க 13 அம்ச ஆணையை நிறைவேற்றினார். அது போல தற்போதைய தமிழக அரசும் ஏடிஜிபி தலைமையில் பெண்களை பாலியல் குற்றத்திலிருந்து பாதுகாத்திட கண்காணிப்புக் குழு அமைத்துள்ளது. அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி, மகா கூட்டணி. மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி தொடர கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்திலும், சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகருக்கு இரட்டை இலைக்கு வாக்களித்து எதிர்த்துப் போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். இந்தக் கூட்டத்தில் பா.ம.க, அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.க  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.