Published:Updated:

`பஜ்ஜியைக்கூட ஓசியில் பிடுங்கிச் சாப்பிடுகிறார்கள்!'- பிரசாரத்தில் தி.மு.க-வை விளாசிய எடப்பாடி பழனிசாமி

`பஜ்ஜியைக்கூட ஓசியில் பிடுங்கிச் சாப்பிடுகிறார்கள்!'- பிரசாரத்தில் தி.மு.க-வை விளாசிய எடப்பாடி பழனிசாமி
`பஜ்ஜியைக்கூட ஓசியில் பிடுங்கிச் சாப்பிடுகிறார்கள்!'- பிரசாரத்தில் தி.மு.க-வை விளாசிய எடப்பாடி பழனிசாமி

``தமிழகத்தில், ஏழைகளுக்கு வீடு இல்லாத நிலை உருவாக்கப்படும். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே ரௌடித்தனம் செய்யும் தி.மு.க, ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தாங்காது’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி, அ.தி.மு.க வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், ‘‘மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழகம் வளம்பெறும். அதற்காகத்தான், அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறோம். இஸ்லாமிய மக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்காக, தமிழக அரசு சிறப்பு நிதி அளிக்கிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தை அமைதியான மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தி.மு.க ஆட்சியில், கடுமையான மின்வெட்டு இருந்தது. அவர்களால், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்ட மாநிலமாகவும் தமிழகம் இருந்தது. அ.தி.மு.க ஆட்சியில், அந்த இரண்டு துறைகளிலும் தமிழகம் சிறந்துவிளங்குகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு பிரதமர் வேட்பாளரை ஸ்டாலின் அறிவிக்கிறார். இங்கு ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்றும், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் பெயரை தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். தி.மு.க கொள்கையில்லாத கூட்டணியை அமைத்திருக்கிறது. 

ஆட்சியில் இருப்பது நாம். அவர்கள் எப்படிக் கடனை தள்ளுபடி செய்ய முடியும். தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாது. அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை 100 சதவிகிதம் நிறைவேற்றமுடியும். தி.மு.க-வினர், அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணைத் தாக்கினார்கள். பரோட்டா கடையில் வயிறு முட்டச் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை அடித்தார்கள். செல்போன் கடையில், செல்போன் வாங்கிவிட்டு பணம் கேட்ட உரிமையாளரைத் தாக்கினார்கள். பஜ்ஜியைக் கூட ஓசியில் பிடுங்கி சாப்பிடுகிறார்கள். தி.மு.க ஆட்சியில், நில அபகரிப்பு அதிகமாக இருந்தது. சுடுகாட்டைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலங்களை மீட்டுக் கொடுத்தது, அ.தி.மு.க ஆட்சிதான். மத்தியில் 15 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த தி.மு.க, தமிழகத்தின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் எதுவும் செய்யவில்லை. அதிகார போதையில் இருந்தனர். காவிரி பிரச்னையில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 23 நாள்கள் குரல் கொடுத்தோம். போராடி, போராடி... உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பையும் பெற்றிருக்கிறோம்.

ஏழைத் தொழிலாளர்களுக்காக ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கினோம். அதைத் தடுக்க தி.மு.க வழக்கு தொடர்ந்தது. தேர்தல் முடிந்தவுடன் ஏழைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.2,000 நிதி வழங்கப்படும். நான் ஒரு விவசாயி. ஆகவே, விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித்தருகிறோம். தமிழகத்தில், ஏழைகளுக்கு, வீடு இல்லை என்கிற நிலை போக்கப்படும். 39 தொகுதிகளிலும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றால் மட்டுமே தமிழகம் செழிக்கும். ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சாதிக்பாட்சா என்பவர், தி.மு.க ஆட்சியில் மர்மமாக இறந்தார். அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக, சாதிக்பாட்சாவின் மனைவி விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த தி.மு.க-வினர் பொறுத்துக்கொள்ள முடியாமல், நான்கு நாள்களுக்கு முன்பு சாதிக்பாட்சா மனைவி சென்ற காரை தாக்கினர். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே ரௌடித்தனம் செய்யும் தி.மு.க-வினர், ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தாங்காது’’ என்றார் காட்டமாக.
 

அடுத்த கட்டுரைக்கு