Published:Updated:

`மயக்க மருந்து; கட்சி அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை' - புதிய தலைவலியை எதிர்கொண்டுள்ள கேரள சிபிஎம்!

`மயக்க மருந்து; கட்சி அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை' - புதிய தலைவலியை எதிர்கொண்டுள்ள கேரள சிபிஎம்!
`மயக்க மருந்து; கட்சி அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை' - புதிய தலைவலியை எதிர்கொண்டுள்ள கேரள சிபிஎம்!

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் லோக் சபா தேர்தல் களைகட்டியுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த வித பிரச்னையும் எதிர்கொள்ளாமல் தேர்தல் வேலைகளை எதிர்கொண்டது. 16ம் தேதி நடந்த சம்பவம் அந்தக் கட்சிக்கு தற்போது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது செருபலச்சேரி. இந்தப் பகுதியில் சமீபத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையை மீட்ட போலீஸார் யாருடைய குழந்தை என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதன்படி பாலக்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 21 வயதுள்ள இளம்பெண் ஒருவரின் குழந்தை என்பதைக் கண்டுபிடித்த போலீஸார் அவரிடம் ஏன் குழந்தையை சாலையோரத்தில் வீசினீர்கள் என்று விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர சம்பவங்கள் வெளிவந்தன. அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ``2018ம் ஆண்டு நான் படிக்கும் கல்லூரியின் பத்திரிகைக்கு கட்டுரை எழுதுவது தொடர்பாக தகவல் சேகரிக்க செருபலச்சேரி சிபிஎம் இளைஞரணி அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது செருபலச்சேரியை சேர்ந்த பிரகாசன் என்பவர் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து கட்சி அலுவலகத்தில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார். அவர் பலாத்காரம் செய்ததில் தான் குழந்தை பிறந்தது" எனக் கூறியுள்ளார். அவரின் புகாரை அடுத்து பாலக்கோடு மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட நீதிபதி அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். உடனே குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரகாசன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். பிரகாசன் அந்தப் பகுதியில் டூ வீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். 

பிரகாசனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ``சம்பந்தப்பட்ட மாணவியும் நானும் காதலித்து வந்தோம். எங்களுக்குள் பழக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் நான் அவரை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. இதில் எனக்குத் தொடர்பில்லை" எனக் கூறியுள்ளார். இருவரின் வாக்குமூலத்தால் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் விவகாரம் டிஎன்ஏ சோதனை வரை செல்லலாம் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த விவகாரத்தில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. காரணம் பாதிக்கப்பட்ட மாணவி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர். அவர்கள் குடும்பம் மொத்தமும், சிபிஎம் ஆதரவாளர்கள். 

சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெண்ணைக் கட்சி அலுவலகத்தில் வைத்தே சீரழிக்கப்பட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டால் பின்னடைவு ஏற்படும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதுகின்றனர். அதற்கேற்றாற்போலவே இந்தக் குற்றச்சாட்டை சிபிஎம்க்கு எதிராகக் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்துப் பேசும் செருபலச்சேரி சிபிஎம் பிரமுகர்கள், ``இந்த சம்பவம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. தேர்தல் நேரத்தில் எங்கள் மீது தவறுகள் கற்பிக்க முயலும் சதி இது. பிரகாசனுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்தப் பெண் கட்சி அலுவலகத்துக்கு எப்படி வந்தார் என எங்களுக்குத் தெரியாது" என மறுத்துள்ளனர். அதேநேரம் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவோ `` மார்க்சிஸ்ட் அலுவலகம் இப்போது பலாத்கார மையமாகியுள்ளது. இதனைக் கூற வருத்தம் அடைகிறேன். இடதுசாரிகள் ஆட்சியில் கேரளாவில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமையை உணர்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் ஆலப்புழா சிபிஎம் பிரமுகர் ஒருவர் தன் கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில், ``தன் மனைவிக்கும் ஆலப்புழா சிபிஎம் தலைவருக்கும் நீண்ட நாட்களாகப் பழக்கம் இருந்து வருகிறது. இது முதலில் வதந்தி என நம்பி வந்தேன். ஆனால் நேற்று இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்ததை நானே கண்டேன். இந்த சம்பவத்துக்கு பிறகு எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். என்னை வீட்டுக்குள்ளும் அனுமதிக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகார் கொடுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்த தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளால் சிபிஎம் கட்சி சிக்கலை எதிர்கொண்டுள்ளது.