`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை!’ - உதயநிதி ஸ்டாலின் | There is stalin support wave, says Udhayanidhi Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (24/03/2019)

`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை!’ - உதயநிதி ஸ்டாலின்

தற்போது இருப்பது மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை.என்று நடிகர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.

உதயநிதிஸ்டாலின்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அவர் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் துவங்கி பண்ருட்டி நகரம், கடாம்புலியூர், சத்திரம், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசுகையில், ``மத்திய ஆட்சி எந்தவிதத்திலும் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையவில்லை. இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பின்தங்கிவிட்டது. பணமதிப்பிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். கடந்த தேர்தலின்போது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், பெரிய நாமத்தைத்தான் போட்டார்.

தற்பொழுது எல்லோரும் மோடி எதிர்ப்பு அலை, மோடி எதிர்ப்பு அலை என்று கூறுகின்றனர். இங்கு வரும் கூட்டத்தைப் பார்க்கும்போது இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை என்றுதான் தோன்றுகிறது. மோடி கடந்த 5 ஆண்டுகளில் 45 முறை 55 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவின் பிரதமர் என்பதை விட உலகம் சுற்றும் வாலிபராக இருக்கிறார். தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக உள்ளது. கதாநாயகன் இருந்தால் வில்லன் இருக்கவேண்டும். யார் வில்லன் என்றால் அது மோடிதான். வில்லன் என்று இருந்தால் எடுபிடிகள் 2 பேர் இருக்கவேண்டும் அது ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ்தான். 

தமிழகத்தில் தற்பொழுது நடந்துவரும் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பொள்ளாட்சி சம்பவங்கள் இதற்குச் சாட்சி. மேலும், நிர்மலாதேவி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரின் சம்பவங்களும் இந்த ஆட்சியின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அ.தி.மு.க, தங்களின் சுயலாபத்திற்காக தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுத்து அடமானம் வைத்து கூட்டணி அமைத்துள்ளனர். அ.தி.மு.க தலைவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்த பா.ம.கவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். தி.மு.க. வெற்றி பெற்றால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளிக்க வேண்டும்’’ என்று அவர் பேசினார். பிரசாரத்தின்போது நெய்வேலி எம்.எல்.ஏ. சபா. ராஜேந்திரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்ற கடலூர் மாவட்டத் தலைவர் லோகநாதன், மாவட்டப் பொருளாளர் டாக்டர் இளையராஜா உட்படப் பலரும் உடனிருந்தனர்.