``தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் குரல் கொடுப்பேன்” - த.மா.கா வேட்பாளர் என்.ஆர் நடராஜன் | tanjore candidate says he will give voice for AIMS

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (26/03/2019)

கடைசி தொடர்பு:09:55 (26/03/2019)

``தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் குரல் கொடுப்பேன்” - த.மா.கா வேட்பாளர் என்.ஆர் நடராஜன்

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், `காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் நடவடிக்கை  எடுப்பேன்’ எனத் தெரிவித்தார்.

நடராஜன்

அ.தி.மு.க கூட்டணியில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுபவர் என்.ஆர்.நடராஜன். இவர் நேற்று தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரையிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். உடன் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், சுரேஷ்மூப்பனார் ஆகியோர் இருந்தனர். த.மா.கா-வின் மாற்று வேட்பாளராக நடராஜனின் சகோதரர் என்.ஆர்.ரெங்கராஜன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து த.மா.கா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் கூறியதாவது, ``நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் வெற்றி பெற்றால் தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க முதல் குரல் கொடுப்பேன். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக்க நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

பின்னர் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ``அ.தி.மு.க கூட்டணியின் த.மா.கா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாங்கள் என்ன செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். மக்கள் நலத் திட்டங்களை, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன தேவையோ அதை நிறைவேற்றுவோம். வரும் 31-ம் தேதி தஞ்சை தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார்” எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க