`நாங்க ஓட்டு போட மாட்டோம்' - தேர்தலைப் புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றிய கிராமங்கள் | cyclone affected villages protests against election

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:00 (27/03/2019)

`நாங்க ஓட்டு போட மாட்டோம்' - தேர்தலைப் புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றிய கிராமங்கள்

சேதுபாவாசத்திரம்  அருகே உள்ள மூன்று கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காததையும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராததையும் கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாக ஃபிளெக்ஸ் வைத்தும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயல் நான்கு மாவட்டங்களை சூறையாடிச் சென்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு பகுதிகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 45 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் வோரோடும், முறிந்தும் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் இடிந்து விழுந்தன. அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், பல கிராமங்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றும், முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள கொடிவயல், மரக்காவலசை, பாலாவயல் ஆகிய கிராமங்கள் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் தாக்கி நான்கு மாதங்கள் கடந்தும் இந்த நாள் வரை எந்த ஒரு நிவாரணப் பொருள்களோ, அரசு அறிவித்த நிவாரணத் தொகையோ கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதோடு தாலுக்கா அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். ஆனால், இதில் அதிகாரிகள் அக்கறை காட்டாமல் அலட்சியப்படுத்தினர். அத்துடன் கலெக்டர் அண்ணாத்துரை, ஆர்.டி.ஓ, தாசில்தார், வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆகியோர்களை சந்தித்து மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் இல்லை.இதனால் மக்கள் பெரும் துயரத்தில் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க முடிவு செய்தனர். அதோடு கஜா புயலில் பாதித்த எங்களுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை. அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம் என ஃபிளெக்ஸ் போர்டு வைத்தனர். மேலும் போஸ்டர் அடித்தும் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்களிடம் பேசினோம், ``நாங்க பலமுறை இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்ததோடு போராட்டமும் நடத்தினோம். இதில் எந்தவிதமான பயனும் இல்லை. அதனால் தேர்தலை புறக்கணிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றினோம். எங்க பகுதியைச் சேர்ந்தவங்க யாரும் ஓட்டு போட மாட்டோம். இதை தெரியப்படுத்தும் விதமாக ஃபிளெக்ஸ், போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளோம். இது வரை பேசாத அதிகாரிகள் சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால், அதற்கு ஒத்துக்கொள்ளாமல் தேர்தலைப் புறக்கணிக்கத்தான் போகிறோம்'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க