`தைலாபுரத்தில் எனக்கு வைத்த விருந்தின்போது..!'- ராமதாஸ் `குட்டை’ வெளிப்படுத்திய திருமாவளவன் | thirumavalavan open about the meeting with ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:17 (29/03/2019)

`தைலாபுரத்தில் எனக்கு வைத்த விருந்தின்போது..!'- ராமதாஸ் `குட்டை’ வெளிப்படுத்திய திருமாவளவன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். சிதம்பரத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமைதாங்கினார்.

திருமாவளவன்

இதில் திருமாவளவன், ``கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சமயோசிதமாகச் செயல்படும் நேரம். தேர்தல் நேரத்தில் எப்படிச் செயல்படப் போகிறோம் என அட்டவணை வகுத்துக்கொள்ள வேண்டும். கட்சிப் பணி வேறு, தேர்தல் பணி வேறு. நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால், 40 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுவது உறுதி.  என்னை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து, வாழையிலை விரித்து சாப்பாடு பரிமாறிய ராமதாஸ்,  தி.மு.க ஒரு துரோகக் கட்சி, அது அழிந்துபோகக்கூடியது. ஆகவே, தி.மு.க-வில் இருந்து வெளியே வர வேண்டும் எனக் கூறினார். அதை நான் உதாசீனப்படுத்தினேன். அன்றிலிருந்து என்மீது வீண் பழி சுமத்தி, சேற்றை வாரித் தூற்றிவருகிறார்.

நான் ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாக வாழ்ந்துவருகிறேன். தி.மு.க-வில் சீட் மட்டும்தான் கிடைக்கும்... நோட் கிடைக்காது என்று எண்ணி, சாதி அடிப்படையில்  வாக்கு சதவிகிதத்தைக் காட்டி பேரம்பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது, வர்த்தக ரீதியான வியாபாரக் கூட்டணி. தி.மு.க தலைமையிலான கூட்டணி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மக்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில்
கலந்துகொண்டு உருவான  கொள்கைரீதியான கூட்டணி. அதிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற கூட்டணி என்று அறிவித்தது. நம்முடைய ஒரே குரல், மோடியை விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான்.  மாநிலக் கட்சிகளை ஒழிக்க பி.ஜே.பி அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது. மோடியால் சிறு, குறு தொழில்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மோடி, கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளையாகத் திகழ்கிறார். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று நான் ஒருபோதும் கூறியது கிடையாது.

இதை எதிர்த்து தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடிவருகிறது. சில யோக்கிய சீலர்கள் கண்டுகொள்வது இல்லை. என்னை சாதியைச் சொல்லி மட்டுமே குற்றம் சுமத்த முடியும்; வேறு எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் மதவாதமா, ஜனநாயகமா என்று முடிவுசெய்ய வேண்டும். கடந்த 2009 தேர்தலைவிட வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு பிரசாரத்திற்கு தொண்டர்கள் பதில் சொல்ல வேண்டாம்" என்றார். 

இதில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, த.வா.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயகக் கட்சி உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.