Published:Updated:

மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் குழப்பம்: நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜினாமா!

மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் குழப்பம்: நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜினாமா!
மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் குழப்பம்: நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜினாமா!
மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் குழப்பம்: நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜினாமா!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரம் நடைபெற்றுவருகிறது. நெல்லை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக வெண்ணிமாலை என்பவர்  நிறுத்தப்பட்டுள்ளார். சென்னையில் தொழில் செய்துவரும் இவர், யார் என்பது கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. 

இந்த நிலையில், வெண்ணிமாலை நெல்லைத் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கமல் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்காமல், தன்னிச்சையாக அவர் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். சென்னையில் இருந்து அழைத்து வந்துள்ள சிலரை வைத்து அவர் பிரசாரம் செய்துவருவது கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதனால், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் மேற்கு மாவட்டப் பொறுப்பாளரான கருணாகரராஜா ஆகியோர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். 

இது தொடர்பாக செந்தில்குமார், கருணாகரராஜா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நெல்லை மத்திய மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டப்  பொறுப்பாளர்களாகப் பணியாற்றிவந்த நாங்கள், அந்தப் பொறுப்பிலிருந்து எங்களை விடுவிக்குமாறு ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் கொடுத்துவிட்டோம், 

மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் குழப்பம்: நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜினாமா!

நெல்லை மாவட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட காயங்கள் ஒருபுறம் இருந்தாலும் நம்மவர் கமலுக்காக, இந்தத் தேர்தல் வரை நாங்கள் அமைதிகாக்கவே விரும்பினோம்.  தேர்தலில் நமது வேட்பாளர்கள் தேர்வின்போதுகூட மாவட்டத்தை அழைத்து ஆலோசிக்காமல், வெளியூர் வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவித்தது. அதற்கும் அமைதிகாத்து பணியாற்றினோம். 

ஆனால், நமது வேட்பாளர்கள் கமல்ஹாசனின் மதிப்பு தெரியாமல் மாவட்டத் தலைமை கூறிய பிரசார வியூகங்களைப் பொருட்படுத்தாமல், சுயவிருப்பத்துக்கு ஏற்ற வகையில் பிரசாரம்செய்து வருகிறார்கள். நாம் கட்சி ஆரம்பித்த நாள் முதல், நமது மாவட்ட த்தில் அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்துவருகிறோம். ஆனால், இவர்களின் பிரசாரம், மாவட்ட முழுவதும் போவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை, 

கட்சித்  தலைமையும் அதைப் பற்றி கவலைப்படவில்லை இந்தச் சூழ்நிலையில், எங்களால் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க மனம் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதுவரை எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய தொகுதி, பகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எங்களது  நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, என்றும் கமல்ஹாசனின் உண்மைத் தொண்டர்களாகத் தொடர்வோம்’’எனத் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் நேரத்தில், ம. நீ.ம கட்சியில் இருந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் இருவர் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம், அந்தக் கட்சித் தொண்டர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.