Published:Updated:

பாமக கூட்டணி: கதவை சாத்தியது திமுக

Vikatan Correspondent
பாமக கூட்டணி: கதவை சாத்தியது திமுக
பாமக கூட்டணி: கதவை சாத்தியது திமுக
பாமக கூட்டணி: கதவை சாத்தியது திமுக

சென்னை: பாமகவுடன் கூட்டணி அமைக்க எந்த திராவிட கட்சியும் விரும்பவில்லை என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அன்பகத்தில் இன்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், இளைஞரணியில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதனடிப்படையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. அந்த அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது?

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு இல்லை. பிறகு எந்த நிலையில் உள்ளது என்று எப்படி சொல்ல முடியும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்க இருக்கிறாரே?


ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை செயல்படுத்த தலைவர் கலைஞர் என்னை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். அதன்படி நானும், அதிகாரிகளும் ஜப்பான் சென்று அந்த நாட்டு நிதியை பெற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற விரைந்து செயலாற்றினோம்.

அதன் அடிப்படையில் தி.மு.க. ஆட்சியிலேயே 90 சதவீத பணிகள் முடிவடைந்தது. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து பணிகள் நடந்திருந்தால் 6 மாதத்திற்குள் பணி முடிந்திருக்கும். அப்படி செய்யாததால்தான் தேக்க நிலை ஏற்பட்டது. ஆனாலும் புதிய தலைமை செயலகம், சேது சமுத்திர திட்டம் போல் கிடப்பில் போடப்படாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முன் வந்ததை வரவேற்கிறேன்.

டாக்டர் ராமதாசை பார்க்க மருத்துவமனைக்கு சென்றீர்களா?

டாக்டர் ராமதாசை பார்க்க செல்லவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் துரைமுருகனை பார்க்க சென்றேன். அவரது அறைக்கு எதிர் அறையில் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் நலம் விசாரித்தேன்.

 திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

எந்த திராவிட கட்சி இவர்களிடம் கூட்டணி வேண்டும் என்று கேட்டார்கள்?. பாமகவுடன் கூட்டணி அமைக்க எந்த திராவிட கட்சியும் விரும்பவில்லை. அவராகவே அப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார்.

மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா?

அதுபற்றி கட்சித்தலைவர் கருணாநிதிதான் முடிவெடுத்து அறிவிப்பார்.


இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

சாத்தப்பட்ட கூட்டணிக் கதவு

மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை  தொடர்ந்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். 

இதனைத் தொடர்ந்து பாமகவை கூட்டணியில் சேர்க்க திமுக தரப்பில் ஆர்வம் காட்டியதால் இருகட்சிகளிடையே கூட்டணி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் பாமக, தற்போது தனித்துவிடப்பட்டுள்ள நிலையில் திமுகவின் நேசக்கரம் நல்ல வாய்ப்பாக கருதப்பட்டது.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,

##~~##
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்ற நிலையில் மாற்றம் இல்லை என்று கூறியதோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வருவதாக கடுமையாக சாடி இருந்தார்.

இதன் காரணமாகவே மு.க. ஸ்டாலின், பாமகவுடன் கூட்டணிக்கு அலையவில்லை என இன்று காட்டமாக கூறியதாக தெரிகிறது.