`பணம் தருகிறோம்,வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடு!'‍-கமல்கட்சி வேட்பாளருக்கு நள்ளிரவில் வந்த போன்கால் | Kamal party member received phone call

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (04/04/2019)

கடைசி தொடர்பு:16:35 (04/04/2019)

`பணம் தருகிறோம்,வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடு!'‍-கமல்கட்சி வேட்பாளருக்கு நள்ளிரவில் வந்த போன்கால்

தஞ்சாவூரில், கமல் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சம்பத் ராம்தாஸ் என்பவருக்கு, மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, `சென்னையைச் சேர்ந்த நீ இங்கு வந்து ஏன் போட்டியிடுகிறாய். இது உனக்கு வேண்டாத வேலை. இது வரைக்கும் எவ்வளவு பணம் செலவு செஞ்சிருப்ப. அதோடு சேர்த்து அதிகமான பணத்தைத் தருகிறோம். வாங்கிக்கொண்டு போய் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடு'' என ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரசாரம்

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளராகப் போட்டியிடுபவர் சம்பத் ராமதாஸ். இவர், முத்துப்பேட்டை பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். சம்பத் ராமதாஸ் மற்றும் தொகுதிப் பொறுப்பாளரான தரும.சரவணன் தலைமையில், தொகுதியில் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல்  கட்சியினர் வீடு வீடாகச் சென்று எளிமையான முறையில் வாக்குகள் சேகரித்துவருவது, தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாக்கு சேகரிக்கும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

இந்த நிலையில், நேற்று இரவு 12.30 மணிக்கு சம்பத் ராமதாஸை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், “சென்னையைச் சேர்ந்த நீ இங்கு வந்து ஏன் தேர்தலில் போட்டியிடுகிறாய்? இது உனக்கு வேண்டாத வேலை. இது வரைக்கும் எவ்வளவு செலவு செஞ்சிருப்ப. அதோடு சேர்த்து பணம் தருகிறோம். வாங்கிக்கொண்டு போய் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடு என்றிருக்கிறார். அதற்கு வேட்பாளர், நான் பணம் காசு எல்லாத்தையும் பார்த்தவன். அமெரிக்காவில் இருந்துட்டுதான் இங்கு வந்திருக்கேன். மக்களுக்கு சர்வீஸ் செய்வதற்காகவே வந்திருக்கேன். உங்க மிரட்டலுக்கெல்லாம் பணிய மாட்டேன்'' என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர், `என்னையா, பிளைக்கத் தெரியாத ஆளா இருக்கியே. தஞ்சாவூர் எங்க கோட்டை தெரியுமா. இங்கு நீ எவ்வளவு வாக்குகள் வாங்குவ. கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு போவியா...'' என்று சொல்ல, `எதுவாக இருந்தாலும் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள்' என சம்பத் ராமதாஸ் போனை கட் செய்திருக்கிறார்.

உடனே, வல்லம் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தை காலி செய்துவிட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்துவிட்டனர். இந்தத் தகவலை கமலுக்கு உடனே தெரிவித்துள்ளனர். அவர்,  நடந்த உரையாடல்கள் அனைத்தையும் எழுதி தலைமைக்கு அனுப்பிவையுங்கள். அடுத்து என்ன செய்யலாம் எனச் சொல்கிறேன் என்று சொன்னதாகத் தெரிகிறது.

கமல் கட்சி வேட்பாளர் பிரசாரம்

இதுகுறித்து பொறுப்பாளர் தரும.சரவணனிடம் பேசினோம். ``தஞ்சைத் தொகுதி மக்களிடையே டார்ச் லைட் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எங்களின் பிரசாரம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதைப் பொறுத்துகொள்ள முடியாதவர்கள், இதுபோன்ற செயல்களைச் செய்துள்ளார்கள். இது யாருடைய கோட்டை என்பது மக்கள்தான் சொல்ல வேண்டும். இவர்கள் சொல்வதற்கு யார்? இதற்குப் பயப்படுகிற ஆள் நாங்கள் இல்லை. என்றாலும், இதை உதாசீனப்படுத்தவும் முடியாது. கால் ரெக்கார்டும் ஆகவில்லை. இதனால், கமல்ஹாசனிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்து, எழுதி அனுப்பியிருக்கிறோம். தேர்தல் ஆணையரிடம் இதைப் பற்றி பேசும் வாய்ப்பும் உள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளரிடம் இது தொடர்பாகப் புகார் கொடுப்பதற்கு மனு எழுதி வைக்கச் சொன்னார். அதன்படி, நடந்தவற்றை எழுதிவைத்துள்ளோம். தலைமையிடமிருந்து உத்தரவு வந்ததுமே இதற்கான புகார் கொடுக்கப்படும்'' என்றார்.

வேட்பாளர் சம்பத் ராமதாஸ், ``பணம் காசு என எல்லாத்தையும் பார்த்துட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை. எனக்குப் பலமாக கமல் இருக்கார்'' என்றார். இந்தச் சம்பவம் தஞ்சாவூரில் வேகமாகப் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க