``வீடு முழுவதும் பணம் வைத்திருக்கும் நபர்!” - ரவீந்திரநாத்குமாரை விளாசிய கே.எஸ்.அழகிரி | KS Azhagiri attacked OPS and his son indirectly in the election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:52 (06/04/2019)

``வீடு முழுவதும் பணம் வைத்திருக்கும் நபர்!” - ரவீந்திரநாத்குமாரை விளாசிய கே.எஸ்.அழகிரி

தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் செய்தார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி

கம்பம் பார்க் சாலையில் தனது பிரசாரத்தை தொடங்கிய கே.எஸ் அழகிரியுடன், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பிரசாரத்துக்கு முன்னதாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய கே.எஸ்.அழகிரி, ``பேராசையும், சுயநலமும் கொண்டவர் பிரதமர் மோடி, பதவிக்கு வந்தவுடன் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார். நாட்டு மக்களைக் கண்டுகொள்ளவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறிவிட்டு, பக்கோடா கடை வைக்கச் சொல்கிறார். தேர்தல் நேரத்தில் ஐந்நூறு, ஆயிரம் எனத் தருவார்கள், வாங்காதீர்கள்… மாறாக ஐந்தாயிரம், பத்தாயிரம் எனக் கேட்டு வாங்குங்கள்.” என்றார்.

மேலும் பேசிய அவர், ``பெரியார் போன்ற குணம் கொண்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். எனக்குத் தெரியும், மக்களிடம் வசூல் செய்துதான் இந்தத் தேர்தலை நடத்துகிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். வீடு நிறைய பணம் வைத்திருக்கும் தேனியைச் சேர்ந்த நபரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு இளங்கோவன்தான் சரியான நபர் என ராகுல்காந்தி இங்கு வேட்பாளராக அறிவித்துள்ளார்” என்றார். ஓ.பி.எஸ் மற்றும் அவரின் மகனை மறைமுகமாக தாக்கிப் பேசினார் கே.எஸ்.அழகிரி. முன்னதாக, தேனி மாவட்டத்துக்கு ரயில் வராமல் இருப்பதற்கு தேனியைச் சேர்ந்த அமைச்சர் கமிஷன் கேட்டதுதான் காரணம் என மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்தைத் தாக்கிப் பேசினார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.