Published:Updated:

குறிவைக்கப்படும் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள்!- இரவில் வீடுகளில் நுழைந்த ஐடி அதிகாரிகள்

குறிவைக்கப்படும் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள்!-  இரவில் வீடுகளில் நுழைந்த ஐடி அதிகாரிகள்
குறிவைக்கப்படும் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள்!- இரவில் வீடுகளில் நுழைந்த ஐடி அதிகாரிகள்

திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். தி.மு.க. தெற்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் உள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டணம் பீட்டர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ரொட்ரிகோ. இவர் தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். இவரது வீட்டுக்கு நேற்று இரவு வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் இரண்டு கார்களில் வந்தனர். பின்னர், வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். அப்போது, ஸ்ரீதர் ரொட்ரிகோ மற்றும் அவரின் மனைவி மட்டும் வீட்டில் இருந்தனர்.

அதே பகுதியில் உள்ள இவரின் தம்பி, ஊராட்சிக் கழகச் தி.மு.க. செயலாளர் ஆனந்த் ரொட்ரிகோ வீட்டிலும் வருமானத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் வீட்டில் உள்ள அறைகளையும், ஆவணங்களையும் சோதனையிட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இச்சோதனையில், பணம் எதுவும் சிக்கவில்லை. வருமானவரித்துறையினர் சோதனையை அறிந்ததும் ஏராளமான தி.மு.க-வினர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருகே தண்டுபத்தில் உள்ள  அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ-வின் வீடு உள்ளது. மெயின்ரோட்டில் அவரது பண்ணை தோட்டமும் உள்ளது. இங்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த மார்ச் 29-ம் தேதி கூறப்பட்ட தகவலைத் தொடர்ந்து 8 பேர் கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் மூன்று கார்களில் வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பண்ணைத் தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பு, மோட்டார் அறை உள்ளிட்ட இடங்களில் சுற்றிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

அதேபோல, கடந்த ஏப்ரல் 1-ம் தேதியும் தோட்டத்தில் மீண்டும் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர். அப்போதும், எதுவும் சிக்கவில்லை. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரிகள், அவரது ஆதரவாளர்களின் இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து திருச்செந்தூரில், அனிதா ராதாகிருஷ்ணனின் வீடு, தோட்டம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.