Published:Updated:

`யாருக்கும் பயப்பட மாட்டேன்; செத்துக்கிடக்கும் வீடியோவை நானும் பார்த்தேன்!'- செம்மலையிடம் அடிவாங்கியவரின் ஆதங்கம்

`யாருக்கும் பயப்பட மாட்டேன்; செத்துக்கிடக்கும் வீடியோவை நானும் பார்த்தேன்!'- செம்மலையிடம் அடிவாங்கியவரின் ஆதங்கம்
`யாருக்கும் பயப்பட மாட்டேன்; செத்துக்கிடக்கும் வீடியோவை நானும் பார்த்தேன்!'- செம்மலையிடம் அடிவாங்கியவரின் ஆதங்கம்

கடந்த வாரம் பிரசாரத்தின்போது, அன்புமணியிடம் கேள்வி கேட்ட அ.தி.மு.க தொண்டனின் கன்னத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை அறைந்த சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த அ.தி.மு.க தொண்டனை அ.தி.மு.க., பா.ம.க- வினர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

ஓமலூரை அடுத்த சிந்தாமணியூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், 25 வருடங்களாக அ.தி.மு.க-வின் தீவிர தொண்டராகவும், சிந்தாமணியூர் கிளைக் கழகச் செயலாளராகவும் இருந்துவருகிறார். கடந்த 31-ம் தேதி, தருமபுரி பா.ம.க வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை வாக்கு சேகரிக்க சிந்தாமணியூர் அழைத்துவந்தார். அப்போது, அன்புமணி தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போது, அ.தி.மு.க தொண்டர் செந்தில்குமார் அன்புமணியைப் பார்த்து, ''அய்யா, கடந்த 5 வருஷமா எம்.பி-யாக இருந்தீர்களே... ஒரு முறைகூட எங்க ஊரு பக்கம் வரலன்னு மக்கள் கேட்கிறாங்க. நானும் உங்களைப் பார்க்கவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தீர்களே, உங்க தொகுதியில் உள்ள சிந்தாமணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாருங்க, பாழ்பட்டுக் கிடக்குது.  நீங்க அமைச்சராக இருந்ததற்கு எம்ய்ஸ் மருத்துவமனை மாதிரி மாற்றியிருக்க வேண்டாமா? குண்டுமணியூர் சாலை, குண்டும் குழியுமா கிடக்குது. எடப்பாடி அரசாங்கம் ஊழல் அரசாங்கமுன்னு கவர்னர்கிட்ட புகார் கொடுத்தீங்களே, 8 வழிச் சாலைக்கு போராடினீங்களே... இதெல்லாம் வேஷமா''  என்று கேட்டதற்கு, கோபம் அடைந்த செம்மலை, அ.தி.மு.க தொண்டர் செந்தில்குமார் கன்னத்தில் பளீர்...பளீர்... என அடித்தார்.

அதையடுத்து அ.தி.மு.க-வினரும், பா.ம.க-வினரும் செந்தில்குமாரை கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது வீட்டில் இருக்கிறார். இந்நிலையில், அ.தி.மு.க, பா.ம.க-வினரால் செந்தில்குமார் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. ஆனால் செந்தில்குமார் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு தி.மு.க-வில் இணைந்தார்.

இந்நிலையில், அந்த அ.தி.மு.க தொண்டர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ''அந்த வீடியோவை நானும் பார்த்தேன். சிறுபிள்ளைத்தனமானவர்கள் இந்த வீடியோவை சித்தரித்திருக்கிறார்கள். இது, அ.தி.மு.க, பா.ம.க வேலையாகத்தான் இருக்கும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், தொடர்ந்து போலீஸார் என்னை அச்சுறுத்துகிறார்கள். நள்ளிரவில் என் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகிறார்கள். வீட்டுக்குள் விளக்கு அடித்துப் பார்க்கிறார்கள். மக்களின் கருத்தைக் கேட்டேன். அதற்குத் தொடர்ந்து அ.தி.மு.க காரர்களும் பா.ம.க காரர்களும் என்னை அச்சுறுத்திவருகிறார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நல்ல மனிதர்களுக்கு மட்டுமே பயப்படுவேன். ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. வியாபாரிகள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள். அதனால், அந்தக் கட்சியைவிட்டு விலகி, ஆதரவாளர்கள் 500 பேரோடு  தி.மு.க-வில் இணைந்துவிட்டேன்'' என்றார்.