`வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போகக் கூடாது!' - கடலூர் தொண்டர்களுக்கு தி.மு.க நிர்வாகி வேண்டுகோள் | Cuddalore DMK official's appeal to their cadres

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:00 (06/04/2019)

`வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போகக் கூடாது!' - கடலூர் தொண்டர்களுக்கு தி.மு.க நிர்வாகி வேண்டுகோள்

கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் போட்டியிடுகிறார். கடலூர்  நாடாளுமன்றத்  தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டச் செயலாளராக உள்ளார். நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கு, திட்டக்குடி எம்.எல்.ஏ வெ. கணேசன் மாவட்ட செயலாளராக உள்ளார். வேட்பாளர் ரமேஷ், தற்பொழுது விருத்தாசலம், திட்டக்குடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் உள்ளார். அவருடன் மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

 ரமேஷ்

அ.தி.மு.க கூட்டணி சார்பில், பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். வேட்பாளர் பிரசாரம், கட்சித் தலைவர்கள் பிரசாரம் எனப் படுவேகமாகச் செயல்பட்டுவருகின்றனர். ஆனால்,  கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க-வில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும் இல்லை என்றும், இதனால் தேர்தல்
பணி படுமந்தமாக உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தி.மு.க மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது.  "கடலூர் தொகுதியில் தி.மு.க கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து,  முறையாகத் தேர்தலில் பணியாற்றினால் வெற்றி நிச்சயம்.  நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க முடியாது. அதற்கு, போதிய அவகாசமும் இல்லை என்பதால், அவர் வாகனத்தில் இருந்தபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுப்படுவார். ஆனால், தி.மு.க-வில் நாங்கள் வழக்கமாக நகரங்களில் நகரச் செயலாளர், வார்டு செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வீடு வீடாக வாக்காளர்களைப் பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோம். இதேபோல கிராமங்களில், ஒன்றியச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு கேட்பாளர்கள். ஆனால், பொறுப்பில் உள்ள தி.மு.க நகர, ஒன்றிய நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதேபோல நிர்வாகிகளின்  செலவிற்கு வேட்பாளர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பணம் முறையாகக் கிளை, வார்டு நிர்வாகிகளைச் சென்றடையவில்லை. இதனால், கட்சி அடிமட்டத் தொண்டர்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

இதைக் கண்காணிக்கவேண்டிய கட்சி மாவட்ட நிர்வாகம், எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. கூட்டணிக் கட்சி சார்பில் நடத்தப்படும் தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் கலந்துகொள்வது இல்லை. சமீபத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. பாலகிருஷ்ணன், தி.க. தலைவர் வீரமணி  ஆகியோர் கலந்துகொண்ட பிரசார கூட்டத்தில் தி.மு.க-வினர் அதிக அளவில்  கலந்துகொள்ளவில்லை என்றால், வேட்பாளர் கூட இல்லாமல் மாநிலத் தலைவர்கள் வாக்கு கேட்டு செல்லும் நிலைதான் உள்ளது.

தி.க.

உடன் தி.மு.க தலைமை இதைக் கண்காணித்து, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, செலவு செய்யப்படும் பணம் முறையாகக் கட்சி நிர்வாகிகளுக்குச் சென்றடையச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் கலந்துகொள்ளும் பிரசார கூட்டமாக இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல், தி.மு.க-வினர் அதிக அளவில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
இல்லையெனில், பிரகாசமாக உள்ள வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போய்விடும் நிலைதான் உள்ளது''. என்றார் வேதனையுடன்.