`18 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக உணர்கிறேன்!' - ஜி.கே.வாசன் | GK Vasan releases TMC's election manifesto in Tanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (06/04/2019)

கடைசி தொடர்பு:20:20 (06/04/2019)

`18 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக உணர்கிறேன்!' - ஜி.கே.வாசன்

`காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், 18 சட்டமன்றத் இடைத்தேர்தல் தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக உணர்கிறேன்' எனத் தஞ்சாவூரில் த.மா.காவின் தேர்தல் அறிக்கையை வெளிட்ட ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்

தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், மக்களவைத் தொகுதியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார்.பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் உள்ள பிரச்னைகள், அங்குள்ள விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் கேட்டு அவர்களது எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடியவை தேர்தல் அறிக்கையாக தயார் செய்யப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய தகுதி பெற்ற வேட்பாளராக எங்களது அணி வேட்பாளர் உள்ளார்.

நான் கடந்த 1-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். இதுவரை 18 மக்களவைத் தொகுதியில் பிரசாரம் செய்துள்ளேன். அனைத்து இடங்களிலும் எங்களது கூட்டணி வெற்றி பெறும். இந்தத் தேர்தலை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய மத்திய பா.ஜ.க அரசு அது தொடர வேண்டும் என மக்கள் உறுதியோடு நினைக்கிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான  அரசுக்கு 18 எம்.எல்.ஏக்களும் வெற்றி பெற்று வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அவர்களது வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே நினைக்கிறேன்'' என்றார்.

ஜி.கே.வாசன்

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை காப்பீடு நிறுவனத்தின் மண்டல நிர்வாக அலுவலகம் தஞ்சாவூருக்கு மாற்றப்படும். காவிரிப் பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களாக அங்கீகரிக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்தப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூவில் புதிய அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது. தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீட்தேர்வு முழுமையாக ரத்து செய்ய நவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை அமைக்கும் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். தஞ்சாவூர் விமான நிலையம் தரம் உயர்த்தி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க