மகளிர் அணியினருடன் சேர்ந்து தீவிர பிரச்சாரம் - கணவருக்காக வாக்கு கேட்கும் மனைவி! | wife of cuddalore PMK Candidate Canvassing

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (07/04/2019)

கடைசி தொடர்பு:15:00 (07/04/2019)

மகளிர் அணியினருடன் சேர்ந்து தீவிர பிரச்சாரம் - கணவருக்காக வாக்கு கேட்கும் மனைவி!

கடலூர் பா.ம.க வேட்பாளருக்கு ஆதரவாக அவரது மனைவி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

டாக்டர் ராமதிலகம்

கடலூர் நாடாளுமன்ற  தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க. சார்பில் டாக்டர் ஆர். கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக விருத்தாசலத்தில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி டாக்டர் ராமதிலகம், மகன்கள் டாக்டர் மகேந்திரன், அருண்குமார் என அனைவரும் மருத்துவர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவராக இருந்து பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதால் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாக உள்ளனர். வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மனைவி டாக்டர் ராமதிலகம் தனது கணவர் வெற்றிக்காகக் காலை மற்றும் மாலை என இருவேளையும் மகளிரணி நிர்வாகிகளுடன் விருத்தாசலம் நகர் முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார். இவருடன் பா.ம.க மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் தமிழரசி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளனர். டாக்டர் ராமதிலகம் பெண்கள் சகிதம் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்டு வருவது பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.