``அமைச்சர் மீது அதிருப்தி!” - முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் மீண்டும் தி.மு.க-வில் சேருகிறாரா? | Cuddalore Ayyapan to join DMK again

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (09/04/2019)

கடைசி தொடர்பு:11:25 (09/04/2019)

``அமைச்சர் மீது அதிருப்தி!” - முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் மீண்டும் தி.மு.க-வில் சேருகிறாரா?

மாவட்ட அமைச்சர் சம்பத், அய்யப்பன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது கோஷ்டி பூசலாக மாறியது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் சம்பத் தரப்பு மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பனுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைந்த அய்யப்பன் ஒதுங்கி இருந்து வந்தார்.

அ.தி.மு.க-வில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன், அமைச்சர் எம்.சி. சம்பத் மீது உள்ள அதிருப்தி காரணமாக, வரும் 11 -ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு பிரசார கூட்டத்திற்கு வரும்  தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாவளர்களுடன் சேர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 அய்யப்பன்


கடலூர் தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ-வாக  இருந்தவர் அய்யப்பன். கடந்த 2011 -ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில்,  கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த  அய்யப்பன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன்  அ.தி.மு.க-வில் இணைந்தார். 2011 தேர்தல் மற்றும் தொடர்ந்துவந்த 2016 -ம் ஆண்டு தேர்தலில், கடலூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழகத் தொழில் துறை அமைச்சரின் வெற்றிக்கு தீவிரமாகப் பாடுபட்டார். கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட அய்யப்பன், கட்சியில் தனி செல்வாக்குடன் இருந்தார். இந்நிலையில், மாவட்ட அமைச்சர் சம்பத், அய்யப்பன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது கோஷ்டிப் பூசலாக மாறியது. 

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் சம்பத் தரப்பு மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பனுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால், கடும் அதிருப்தியடைந்த அய்யப்பன் ஒதுங்கி இருந்துவந்தார்.

இதுகுறித்து அய்யப்பனிடம் கேட்டதற்கு, "நான் அ.தி.மு.க-வில் சேர்ந்த பிறகு நடந்த இரண்டு தேர்தலிலும் அமைச்சர் சம்பத் வெற்றிபெற கடுமையாக உழைத்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டவுடன், வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி என்னை வந்து சந்தித்தார். அப்போது, அவரிடம் நீங்கள் எப்போது கூட்பிட்டாலும் பிரசாரத்திற்கு வருகிறேன்; என் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு என்றேன். பின்னர், வேட்புமனு தாக்கல் அன்று என்னை வரும்படி வேட்பாளர் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. நானும் எனது ஆதரவாளர்களுடன் காலையிலேயே தயாராகி இருந்தேன். ஆனால், வேட்பாளர் தரப்பில் அமைச்சர் ஆதரவாளர்கள், நீங்கள் வருவதை விரும்பவில்லை, நீங்கள் வேண்டுமானால் மாற்று வேட்பாளருடன் வாருங்கள் எனக் கூறினார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், அமைச்சர் தரப்பில் கூறியதைக் கூறினார்கள்.

அதன்பின்பு, கடந்த 15 நாள்களாகப் பிரசாரம் செய்யத் தயாராக எனது ஆதரவாளர்களுடன் உள்ளேன். ஆனால், என்னை யாரும் அழைக்கவில்லை. என்னை தொடர்ந்து புறக்கணித்துவருவதால்,  நான் ஒரு முடிவு எடுக்கவேண்டிய நிலையில் உள்ளேன். எனது ஆதரவாளர்களுடன் பேசி, ஓரிரு நாள்களில்  நல்ல முடிவு எடுக்க உள்ளேன்” என்றார்.


இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள, வரும் 11 -ம் தேதி கடலூர் வரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தாய்க் கழகமான தி.மு.க-வில் அய்யப்பன் சேர உள்ளதாக அவரது  ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நேற்று தி.மு.க தலைமை ஒகே கூறி, அவர்கள் கூறியபடி  கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை அய்யப்பன் சந்தித்துள்ளதாகவும் தெரியவருகிறது.