Published:Updated:

``இரண்டு இந்தியாவை உருவாக்கியதுதான் மோடியின் சாதனை!" - சீதாராம் யெச்சூரி காட்டம்!

``இரண்டு இந்தியாவை உருவாக்கியதுதான் மோடியின் சாதனை!" - சீதாராம் யெச்சூரி காட்டம்!
``இரண்டு இந்தியாவை உருவாக்கியதுதான் மோடியின் சாதனை!" - சீதாராம் யெச்சூரி காட்டம்!

``கடந்த 5 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழை மக்களுக்கான இந்தியா என்ற இரண்டு விதமான இந்தியாவை உருவாக்கியுள்ளதுதான் மோடியின் சாதனை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  தூத்துக்குடி மக்களவை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``நமது நாட்டுடைய எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி இன்று நம் முன்னால் இருக்கிறது. நம் நாட்டுடைய மதச்சார்பற்ற ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்பது முக்கியமான பிரச்னையாக உள்ளது. இந்தத் தேர்தல் போராட்டம் என்பது அடுத்த 5 ஆண்டு இங்கு ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல் சட்டம் தந்துள்ள உரிமைகள் தொடருமா?, இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக இருக்குமா? என்ற கேள்வியைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான தேர்தலாக இந்தத் தேர்தல் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவிக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இளைஞர்கள் வேலையில்லாமல் வாடிக்கொண்டிருக்கின்றனர். 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை தருவேன் எனக் கூறினார்  மோடி.   இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லாத்  திண்டாட்டம் உருவாகியுள்ளது. ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பாலும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்விழந்துள்ளனர். கோவில்பட்டியில் சிறப்பு பெற்ற தீப்பெட்டியையும்  கடலைமிட்டாயையும்கூட மோடியின் ஜி.எஸ்.டி., விட்டு வைக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழை மக்களுக்கான இந்தியா என்ற இரண்டு விதமான இந்தியாவை உருவாக்கியுள்ளார். இதுதான் அவரது ஐந்தாண்டுக்கால சாதனை.13 லட்சம் கோடி ரூபாய் கடன்கள், பிரதமரின் நண்பர்களுக்கான பெரு முதலாளிகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கடன்களை திருப்பச் செலுத்தாமல் வெளிநாடு சென்று விட்டனர். ரபேல் ஊழல் போன்ற இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் இதுவரை நடைபெறவில்லை. 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் தனது நண்பர் அம்பானிக்காகச் செய்திருக்கிறார். பெரிய ஒப்பந்தங்கள் அனைத்தும், பிரதமரின் கார்ப்பரேட் நண்பர்களான அதானிக்கும், அம்பானிக்கும் கொடுக்கப்படுகிறது.

ஏழை விவசாயிகள் கடனில் மூழ்கி தத்தளித்து வருகின்றனர். மறுபக்கம் பொதுப்பணத்தை பெருமுதலாளிகள் கொள்ளையடித்து வருகின்றனர். மோடி தனியாகக் கொள்ளையடிக்க வில்லை அவருக்கு தமிழகத்தில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்., என்ற கூட்டாளிகள் உள்ளனர். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம்,  இந்தியாவில் மோடி ஆட்சியையும், தமிழகத்தில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்., ஆட்சியையும் அகற்ற வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபடுத்தப்பட்டுள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகால ஆட்சி மதவெறி பிடித்த ஆட்சியாகத்தான் அமைந்திருக்கிறது. நாட்டின் சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், அரசியல் சட்டம் தந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை இல்லாமல் செய்யவும் முயற்சி செய்கிறார்கள்” என்றார்.