Published:Updated:

`மூட்டை மூட்டையாக நோட்டாவுக்குப் போடாதீங்க!’ - வேலூரில் துரைமுருகனைக் கலாய்த்த கமல்ஹாசன்

`மூட்டை மூட்டையாக நோட்டாவுக்குப் போடாதீங்க!’ - வேலூரில் துரைமுருகனைக் கலாய்த்த கமல்ஹாசன்
`மூட்டை மூட்டையாக நோட்டாவுக்குப் போடாதீங்க!’ - வேலூரில் துரைமுருகனைக் கலாய்த்த கமல்ஹாசன்

`மூட்டை மூட்டையாக நோட்டாவுக்குப் போடாதீங்க!’ - வேலூரில் துரைமுருகனைக் கலாய்த்த கமல்ஹாசன்

``மூட்டை மூட்டையாக நோட்டாவுக்குப் போடும் ஓட்டை எங்களுக்குப் போடுங்கள். அது, எந்த நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று துரைமுருகனை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலாய்த்ததால் பிரசாரக் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, 9-ம் தேதி இரவு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். வேலூர் மண்டித் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ``குடிசையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். விவசாயம், சிறு வியாபாரிகள், கல்வி, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் கவனிப்பதற்கு ஒரு அரசு தேவை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் துரத்திச்சென்று தீர்ப்பளிக்க மொபைல் நீதிமன்றங்கள் வேண்டும். மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழித்துக் கட்டுவதற்காக கங்கணம் கட்டிவந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம்.

5 வருட வாழ்க்கையை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிடாதீர்கள். பணத்தைக் கண்டு மயங்காதீர்கள். எங்களிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். நான் சம்பாதித்ததில் வரி கட்டியது போக மீதியைக் கட்சிக்காக வைத்திருக்கிறேன். எங்கள் வேட்பாளர்கள் மற்ற எம்.பி-க்கள் போல் இருக்கமாட்டார்கள். நாடாளுமன்றத்துக்குச் சென்றால் மற்ற அரசியல்வாதிகளுக்கு பயந்து பம்மிக்கொண்டு நுனி நாற்காலியில் உட்கார்ந்து கொடுத்ததை வாங்கிக்கொண்டு வராமல், எங்களுக்குச் சேரவேண்டியதை கொடு என்று கேட்டுவாங்குவார்கள். கொடுத்த வேலையைச் செய்யத் தவறினால் எம்.பி-யாக தேர்வுசெய்யப்படும் என்னுடைய வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் ராஜினாமா செய்வார்கள். மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். எங்களைக் கண்காணியுங்கள். 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அனைவரையும் நான்தான் என்று நினைத்து ஓட்டு போடுங்கள்.

நீங்கள் ஏன் போட்டியிடவில்லை, பயமா என்று சிலர் கேட்டார்கள். பயந்தால் இந்த இடத்துக்கே வந்திருக்கமாட்டேன். என்னுடைய இலக்கு தமிழகம்தான். அரசியல் என்னுடைய தொழில் இல்லை. நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பு. தமிழகத்துக்கு ஏற்பட்ட அவலம் என்னவென்றால், கல்வியை வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு சாராயத்தை உன்னதமான தொழிலாக ஏற்றுநடத்துகிறது அரசு. எங்களுக்கு ஆட்சி பலம் வந்தால், காமராஜர் கண்ட கனவுபோல் நாங்களும் காணத் துணிவோம். தமிழ் குழந்தைகள் அனைவருக்கும் 1 முதல் ப்ளஸ் டூ வரையில் இலவச கல்வி தருவோம். பாடப் புத்தகங்களை நீங்களே காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். அரசியல்கட்சிகள் இலவச பொருள்களை கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதென்ன அவர்களின் பாட்டன் வீட்டு சொத்தா? உங்களுடைய பணம். மக்கள் ஒரு நாள் உணர்ந்துகொண்டு திருந்திவிடுவார்கள். ஆனால், மக்களை ஆளும் இவர்கள் உணர்ந்தாலும் திருந்தமாட்டார்கள்.

இன்ஜினீயரிங் படித்துவிட்டு கார் ஓட்டுநர்களாகவும், கதவு திறந்துவிடுபவர்களாகவும் என்னுடைய தம்பிகளும், மகன்களும் இருக்கிறார்கள். இந்த நிலைமையை என்னால் மாற்றமுடியும். மூட்டைக் கட்டுவது என்றால் வேலூரைச் சேர்ந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மூட்டை மூட்டையாக நோட்டாவுக்கு போடாதீர்கள். எங்களுக்கு ஓட்டாகப் போடுங்கள். அது, எந்த நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை. மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டாகிறது. இந்தக் கட்சிப் பெயரை உச்சரிக்க வைக்க 5 ஆண்டுகளாகும் என்று கணித்தார்கள் பண்டிதர்கள். ஆனால், மக்கள் சாரை சாரையாக அணிவகுத்து நிற்கிறார்கள். எங்கள் சின்னம் டார்ச் லைட் ஒளிவீசுகிறது. வேலூருக்கு மீண்டும் வருவேன். வெற்றிபெற வைத்த பிறகு எங்கள் வேட்பாளர்கள் மக்களைச் சந்திக்க வரவில்லை என்றால், நான் அவர்களின் முதுகில் கைவைத்து மக்களைப் பார்க்க போங்க நண்பா என்று தள்ளிக்கொண்டே இருப்பேன்’’ என்றார்.

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உதவியாளருக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாக ரூ.10 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது சம்பந்தமாக, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூட்டை மூட்டையாகச் சிக்கிய பண விவகாரத்தைக் கமல்ஹாசன் நோட்டா, ஓட்டு என்றுகூறி துரைமுருகனை கலாய்த்ததால் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
 

அடுத்த கட்டுரைக்கு