வருமான வரித் துறை ரெய்டு! - முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பனின் முடிவால் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி? | Cuddalore former MLA Ayyapan plans to join DMK again

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (10/04/2019)

கடைசி தொடர்பு:10:40 (10/04/2019)

வருமான வரித் துறை ரெய்டு! - முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பனின் முடிவால் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி?

வருமான வரித் துறை ரெய்டு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளும் அவருடன் மாற்றுக் கட்சியில் இணைய முடிவுசெய்திருப்பது தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க-விற்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன், அமைச்சர் எம்.சி. சம்பத் மீது உள்ள அதிருப்தி காரணமாக, தி.மு.க-வில் இணைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டில் நடந்த வருமான வரித் துறை ரெய்டு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளும் அவருடன் மாற்று கட்சியில் இணைய முடிவு செய்திருப்பது, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க-வுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


 அய்யப்பன்

கடலூர் தொகுதியில், தி.மு.க எம்.எல்.ஏ-வாக  இருந்தவர் அய்யப்பன். கடந்த 2011 -ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில்,  கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த  இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ,தனது ஆதரவாளர்களுடன்  அ.தி.மு.க-வில் இணைந்தார். 2011 தேர்தல் மற்றும் தொடர்ந்து வந்த 2016 -ம் ஆண்டு தேர்தலில், கடலூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக தொழில் துறை அமைச்சர் வெற்றிக்கு தீவிரமாகப் பாடுபட்டார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார், கட்சியில் தனி செல்வாக்குடன் இருந்தார். இந்நிலையில், அமைச்சர் சம்பத், அய்யப்பன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது கோஷ்டி பூசலாக மாறியது.  இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில்  அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் கடும் அதிருப்தியடைந்தவர், ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் தி.மு.க-வில் இணையத் தனது ஆதரவாளர்களுடன் இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்திவந்தார். அவரது வீட்டுக்குச் சென்ற அ.தி.மு.க மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர், அவருக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர்.

அய்யப்பன்

இந்நிலையில், நேற்று மதியம் அவரது வீட்டுக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், சுமார் இரண்டு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அவரது வீட்டில் இருந்து பணம், ஆவணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என அய்யப்பன் தெரிவிக்கிறார். வருமான வரித்துறை சோதனையால், அய்யப்பன் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  இதனால், அ.தி.மு.க-வில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிரணி நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வில் கட்சி பதவியை ராஜினமா செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் அய்யப்பன் தி.மு.க-வில் சேரும்போது, அவருடன் தி.மு.க-வில்  இணைய முடிவுசெய்துள்ளனர். நாடாளுமன்றத்  தேர்தல் நெருங்கும் நேரத்தில் அய்யப்பனின் இந்த முடிவு, அ.தி.மு.க-விற்கும், பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.