`பணம் தர்றோம், எங்க பக்கம் வந்துவிடு!'- அ.ம.மு.க நிர்வாகியை மிரட்டித் தாக்கிய அ.தி.மு.க-வினர் | fight between admk and ammk cadres at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:50 (11/04/2019)

`பணம் தர்றோம், எங்க பக்கம் வந்துவிடு!'- அ.ம.மு.க நிர்வாகியை மிரட்டித் தாக்கிய அ.தி.மு.க-வினர்

``வேண்டிய வசதிகள் செய்து தருகிறோம். எங்க பக்கம் வந்து விடு'' என தஞ்சாவூர் அ.ம.மு.க நிர்வாகி ஒருவரை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கேட்டுள்ளார். பிறகு வர மறுத்த அவரை அந்த நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதற்கு காரணமானவர்களை கைதுசெய்ய வேண்டும் என அ.ம.மு.க-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அமமுகவினர்

தஞ்சாவூரில் தேர்தல் பணிகள் செய்வதில் அ.தி.மு.க-வுக்கும், அ.ம.மு.க-வுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று பிரசாரத்துக்கு வந்த தினகரன் தஞ்சாவூரை என்னோட சொந்த மண் என பேசி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் குஷிப்படுத்தினார். இந்த நிலையில், அ.ம.மு.க-வின் 20-வது வார்டு பிரதிநிதியான சத்யமூர்த்தி என்பவர் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் ஓட்டு கேட்டு நேற்று இரவு வீதி வீதியாக சென்றார். அப்போது இரட்டை இலைக்கு வாக்களித்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வீடுகளை இடிக்க ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்து விடுவர் என பேசிக் கொண்டே வாக்குகள் கேட்டார்.

தாக்கப்பட்ட அமமுக பிரமுகர்

பின்னர் வீட்டுக்குச் சென்ற சத்யமூர்த்தியிடம் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரும் வார்டு செயலாளருமான சரவணன் என்பவர் தனது ஆதரவாளர்கள் 7 பேருடன் சென்று, ``நீ அ.தி.மு.க பக்கம் வந்து விடு, உனக்கு வேண்டிய பணம், வசதிகள் செய்து தருகிறோம்' எனக் கூறியுள்ளார். அதற்கு சத்யமூர்த்தி, ``நான் வர முடியாது. அ.ம.மு.க-வில் தான் இருப்பேன்' எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தன் ஆதரவாளர்களோடு சத்யமூர்த்தியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தஞ்சாவூர் காவல் நிலையம்

ரத்தம் வலிந்த நிலையில், சத்யமூர்த்தி தாக்கியவர்கள் மீது புகார் கொடுக்க மேற்கு காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். பணியில் இருந்த காவலர்கள் அவர் புகாரை ஏற்காமல் அங்கேயே உட்கார வைத்துவிட்டனர். இந்தத் தகவல் காலையிலேயே அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு தெரியவந்ததும் ஏராளமானவர்கள் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ``புகார் கொடுக்க வந்தவரிடம் புகாரை ஏற்கவில்லை. அ.தி.மு.க-வினர் தாக்கியதில் காயமடைந்த அவரை சிகிச்சை அளிக்காமல் உட்கார வைத்துள்ளீர்கள். இது எந்த விதத்தில் நியாயம். நீங்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா'' எனக் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அமமுகவினரை சமாதானப்படுத்தும் காவலர்

``இதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என கூறினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மூர்த்தி என்ற அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் அங்கு வர அவரை தாக்க முற்பட்டனர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்கள். உடனே மூர்த்தியை மீட்டு காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்தனர் போலீஸார்.

இது குறித்து அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறோம். அ.தி.மு.க-வை மக்கள் விரும்பவில்லை. அவர்களால் எங்களைப் போன்று வேலை செய்ய முடியவில்லை. அதனால் எங்களிடம் உள்ளவர்களை விலைக்கு வாங்கப் பார்க்கிறார்கள். மறுத்தால் இதுபோன்ற தாக்குதல் நடத்தி பயமுறுத்தப் பார்க்கிறார்கள். இது எங்களிடம் எடுபடாது. தேர்தல் முடிவு வரட்டும், பார்த்துக்கொள்கிறோம்'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க