``சினிமாவில் பாட்டுப்பாடுவேன், டான்ஸ் ஆடுவேன். ஆனால் இங்கு அப்படி அல்ல" - கமல் | Kamal Speech at Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (11/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (11/04/2019)

``சினிமாவில் பாட்டுப்பாடுவேன், டான்ஸ் ஆடுவேன். ஆனால் இங்கு அப்படி அல்ல" - கமல்

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கடலூர் உழவர் சந்தை அருகில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசியதாவது,

``கடலூர் தொகுதியில் போட்டியிடும் உங்கள் வேட்பாளர் அண்ணாமலை உங்கள் குரலை தலைநகர் டெல்லி வரை எடுத்துச் செல்வார். இவர் உங்களுக்காகப் பேசி வாதாடி பல்வேறு திட்டங்களைப் பெற்றுத் தருவார். விருத்தாசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்ட அஸ்தஸ்து பெற்றுத் தருவார். ஏரி, குளங்களைத் தூர் வார நடவடிக்கை எடுப்பார். வெலிங்டன் ஏரியைத் தூர் வார நடவடிக்கை எடுப்பார். பண்ருட்டியில் முந்திரி ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுப்பார் உட்பட உங்களின் பல்வேறு கோரிக்கைகளின் மேல் நடவடிக்கை எடுப்பார்.

கமலஹாசன்.

எனக்குப் பல இடங்களில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. காவல் துறையினரும் மனிதர்கள்தான், அவர்களை ஏவல் துறையாக மாற்றாமல், காவல் துறையாகவே வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. என்னை நீங்கள் சினிமாவில் பார்க்க வேண்டும் எனில் காசு கொடுத்து ஏ.சி. தியேட்டரில் அமர்ந்து பார்க்கலாம். அங்கு பாட்டு பாடுவேன், டான்ஸ் ஆடுவேன். ஆனால் இங்கு அப்படி அல்ல,
 மக்களுக்கான பேச்சைத்தான் பேசுவேன். மக்களுக்கான செயலைத்தான் செய்வேன். இங்கே வந்து உங்களுக்குப் பொழுதுபோக்கு கிடையாது. கடுமையான வெயில் அடிக்கிறது. இங்கு வந்திருப்பவர்கள் உண்மையாகத் தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தேடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி, இந்தக் கூட்டம், சங்கமம் புரட்சியாக மாற வேண்டும். நீங்கள் அனைவரும், நான் உட்பட ஒரு புரட்சியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். தமிழகத்தைப் புரட்டிப் போடும் புரட்சி அது. அதைச் செய்துகாட்டுங்கள். காசு கொடுத்தால் வாங்கிவிட்டு சும்மா இருப்பார்கள் மக்கள் எனச் சொல்கிறார்கள் அல்லவா அது இல்லை என்பதை உங்கள் செயலால் நிரூபித்துக்காட்டுங்கள். அப்படி நிரூபித்தால் நாளை நமதே வணக்கம். இவ்வாறு பேசினார்.