`அவர் விவசாயி அல்லர்; விஷவாயு!' - சிதம்பரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு | DMK President MK Stalin election campaign in Chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (13/04/2019)

கடைசி தொடர்பு:13:50 (13/04/2019)

`அவர் விவசாயி அல்லர்; விஷவாயு!' - சிதம்பரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மேற்கொண்டார். முன்னாள் 
அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்..

மு.க.ஸ்டாலின்

கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் ஆதரவு- தந்து வெற்றியைத் தேடித்தர வேண்டும். தமிழர்களுக்காகத் திருமாவளவன் சிந்தித்துப் போராடி, வாதாடிக் கொண்டிருக்கிறார். அவர் மக்களவைக்குச் சென்று முழங்கிட வேண்டும். நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மதவெறி பிடித்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகக் கருணாநிதி ஆட்சி இருந்தது. ஆனால், ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அடையாளமாக தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி ஆட்சி உள்ளது.  

இந்தத் தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை
 உள்ளது. மோடி சர்வாதிகாரி, எடப்பாடி உதவாக்கரை. கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அப்போது  அவர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இடஒதிக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஏழைகளின் முகம் மலர்ந்திருந்தது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் ரத்து, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நல வாரியம், உழவர் சந்தை, முதல்பட்டதாரிக்கு கல்வி உதவி, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைக் கருணாநிதி செயல்படுத்தினார். மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியது. 

மு.க.ஸ்டாலின்

மத்தியில் உள்ள மோடி அரசு 5 ஆண்டுகளில், தமிழகத்தில் அ.தி.மு.க 8 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தார்கள். மோடி 5 ஆண்டுக்
கால ஆட்சியில் 50 ஆண்டுகள் நாடு பின்னோக்கி சென்றுவிட்டது. துக்ளக் தர்பார் ஆட்சிதான் மோடி ஆட்சி. எடப்பாடி
தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடமெல்லாம் நான் ஒரு விவசாயி, கோழி, ஆடு வளர்த்து வருகிறேன் என்று கூறுகிறார்.
மக்களை வளர்த்தீர்களா என்றால் இல்லை. அவர் விவசாயி அல்லர். விஷவாயு. அவர் நாட்டை ஆளக்கூடாது.
நான் தேர்தல் பிரசாரத்தில் 3 கேள்விகளை முன் வைக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. 
கொடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி சம்பவம்  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 3விஷயங்கள் மீது விசாரணை நடத்தி
 குற்றவாளிகளை ஜெயிலுக்கு அனுப்புவது எனது முதல் வேலை.

கருணாநிதி இல்லாமல் முதல் முதலாகத் தேர்தலை சந்திக்கிறோம். அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவர் நம்மோடு வாழ்ந்து 
கொண்டு இருக்கிறார். அவர் மகனாக உங்கள் முன் ஆதரவு கேட்டு நிற்கிறேன். அவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இந்தத் 
தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் 
பெற்றி பெறச் செய்ய வேண்டும். இது போல கடலூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ரமேஷையும் வெற்றி பெறச் செய்யுங்கள்"
இவ்வாறு அவர் பேசினார்.

சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன், புவனகிரி தி.மு.க எம்.எல்.ஏ சரவணன், சிதம்பரம் நகரச் செயலாளர் செந்தில்குமார், 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.