`இருவேறு நிலைப்பாடு' - கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் பரிதவிக்கும் அ.தி.மு.க வேட்பாளர்! | thanjavur elecompagain in admk and tmc at akamudaiyaar sangakm

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (13/04/2019)

கடைசி தொடர்பு:22:20 (13/04/2019)

`இருவேறு நிலைப்பாடு' - கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் பரிதவிக்கும் அ.தி.மு.க வேட்பாளர்!

தஞ்சாவூரில் அகமுடையார் சங்கத்தினர்  தங்கள் ஆதரவை அ.தி.மு.க கூட்டணி கட்சி நாடாளுமன்ற வேட்பாளரான நடராஜனுக்கு அளித்துள்ளதோடு அவருக்கே வாக்களிக்க வேண்டும், கள்ளர் சமூகத்தை சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது என கூறியுள்ளனர். இதனால் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான காந்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். 

அ தி மு க வேட்பாளர்

ஒரே கூட்டணியில் உள்ள தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  நடராஜன் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார் இவர் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர். சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க வை சேர்ந்த காந்தி என்பவர் போட்டியிடுகிறார் இவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் நடராஜனுக்கு ஆதரவாக அகமுடையார் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆசைதம்பி மற்றும் அ.தி.மு.க, த.மா.காவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நடராஜன்

இந்த கூட்டத்தில் அகமுடையார் சமூகத்தை சேர்ந்த அனைவரும் நடராஜனுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும் கள்ளர் சமூகத்தை சேர்ந்த  வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது  நாடாளுமன்ற தொகுதிக்கும் மட்டும் இந்த நிலைப்பாடு என பேசினர். இது வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற வேட்பாளரான காந்தி ஆகியோரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. இது குறித்து சிலரிடம் பேசினோம், இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது அ.தி.முகவில் உள்ள அகமுடையார் சமூகத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தான். அகமுடையார் வாக்குகள் அந்த சமூகத்தை சேர்ந்த நடராஜனுக்குத்தான் கள்ளர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளருக்கு இல்லை என்கிறார்கள். இதனால் கள்ளர் சமூகத்தை சேர்ந்த காந்தி பாதிக்கப்படுவார்.

வைத்திலிங்கம் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு

நாடாளுமன்றத்திற்கு ஒரு நிலைப்பாடும், சட்டமன்றத்திற்கு ஒரு நிலைப்பாடும் என எடுப்பது வாக்களர்களை குழப்ப கூடும். தவிரவும் இதை ஒரு கூட்டம் போட்டு அறிவிக்க வேண்டியதில்லை. இதையே எதிர்கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் விமர்சனங்களாக வைக்க தொடங்கி விட்டது. ஒரே கூட்டணியில் சட்டமன்றத்திற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவரும், நாடாளுமன்றத்திற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவரும் வேட்பாளராக நிற்கும் போது இந்த கூட்டத்தை நடத்துவதற்கு எப்படி ஒப்பு கொண்டார் என தெரியவில்லை. தேர்தல் என்று வரும் போது எல்லோர் சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆதரவையும் பெறுவது அவசியம். ஒரே கூட்டணியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடும் போது கவனமாக கையாள வேண்டியதும் முக்கியம்.

வைத்திலிங்கம் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு

காந்தி தனக்காக பிரச்சாரம் செய்பவர்களுக்கு காந்தி நோட்டை தாரளமாக இறக்குவதால் கட்சியினர் உற்சாகமாக வலம் வருகிறார்கள். ஆனால் கட்சியில் சில உள்ளடி வேலைகள் மற்றும் சமூக ரீதியான கூட்டங்களை வெளிப்படையாக நடத்துவதால் காந்தி பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்றனர். இது குறித்து காந்தியிடம் பேசினோம், ``அகமுடையார் சங்கத்தின் தலைமை  நிர்வாகம்  எங்க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூருக்கு மட்டும் தான் இது பொருந்தும். தமிழகத்திற்கு இல்லை. நாடாளுமன்றத்தில் நடராஜனுக்கும் சட்டமன்றத்திற்கு எனக்கும் அவர்கள் ஆதரவை தந்துள்ளனர். இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க