கடலூரில் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க உறுப்பினர் தீக்குளிப்பு | DMK member Immolation during election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (14/04/2019)

கடைசி தொடர்பு:09:30 (14/04/2019)

கடலூரில் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க உறுப்பினர் தீக்குளிப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே  தி.மு.க. எம்.எல்.ஏ. சபா. ராஜேந்திரன் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.பிரமுகர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜலிங்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரசிங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம்(47). இவர் தி.மு.க. உறுப்பினர். ராஜலிங்கம் சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறால் பண்ணை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். அப்பொழுது நாகப்பட்டினத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஜெயபிரகாஷ் என்பவரிடம் பணம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை ராஜலிங்கம் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.  ராஜலிங்கத்திற்கு இறால் பண்ணை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கிருந்த ஜெனரேட்டர், மின் மோட்டார் உட்படப் பொருட்களை எடுத்து வந்துள்ளார்.

இது குறித்து நாகப்பட்டினம் தி.மு.க. பிரமுகர் ஜெயபிரகாஷ் கொடுத்த தகவலினை அடுத்து நெய்வேலி எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரனின்
சகோதரர் பாலமுருகன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாகனத்தை மறித்து ஒரு கடையில் பொருட்களை இறங்கி வைத்துள்ளார். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால் இந்த பொருட்களை ஜெயபிரகாஷிக்கு ஏற்றி அனுப்பியுள்ளனர்.

 

இது குறித்து ராஜலிங்கம் தலைமை செயலகம், மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், நெய்வேலி டி.எஸ்.பி உட்பட அனைவருக்கும் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ராஜலிங்கம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கடலூர் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர் ரமேஷுக்கு ஆதரவு கேட்டு வீரசிங்கன்குப்பம் கிராமத்தில் சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ராஜலிங்கம் இது குறித்து கேட்டுள்ளார். அங்கிருந்த போலீசார் அவரை வெளியேற்றியுள்ளனர். பின்னர் மீண்டும் அன்று இரவு முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எதிரே தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ. சபா. ராஜேந்திரன் பிரசாரத்தில் இருந்த போது அங்கு வந்த ராஜலிங்கம் தனது உடலில் மண்ணணெய் ஊற்றித் தீவைத்து கொண்டு பிரசார வாகனத்தை நோக்கி ஓடியுள்ளார். இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து தீயை அணைத்துள்ளனர். படுகாயமடைந்த ராஜலிங்கத்தை  போலீசார் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.