`ஜெயலலிதாவை அதுக்குள்ள மறந்துட்டீங்களா?!' - பிரசாரத்தில் தஞ்சை அ.தி.மு.க தொண்டர்கள் வருத்தம் | Cadres express displeasure over ADMK election campaign in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (15/04/2019)

கடைசி தொடர்பு:20:15 (15/04/2019)

`ஜெயலலிதாவை அதுக்குள்ள மறந்துட்டீங்களா?!' - பிரசாரத்தில் தஞ்சை அ.தி.மு.க தொண்டர்கள் வருத்தம்

தஞ்சாவூரில், அ.தி.மு.க சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காந்திக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமிட்ட சிறுவனும், பெரியவர் ஒருவரும் வீதி வீதியாக வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தனர். ஆனால், ஜெயலலிதா வேடமிட்ட ஒரு பெண்ணை பிரசாரம் செய்வதற்கு வேட்பாளர் ஏற்பாடு செய்யவில்லை.'ஜெயலலிதாவை தெய்வம் என்று சொல்கிறவர்கள், அதற்குள் ஜெயலலிதாவை மறந்துவிட்டனர்' எனத் தொண்டர்கள் புலம்புகின்றனர்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராகப் போட்டியிடுபவர், காந்தி. இவருக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், பிரேமலதா மற்றும் பல பிரபலங்கள் பிரசாரம் செய்தனர். ஆனாலும், எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவர் நமக்காக வாக்கு கேட்டால் கூடுதல் பலமாக  இருக்கும் என யோசித்த காந்தி, அதற்கு ஏற்பாடுசெய்து எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவருடன் வீதி வீதியாக வாக்குகள் கேட்க வைத்தார். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அப்போது பெண் தொண்டர்கள், அடுத்து அம்மா வேடமிட்ட ஒருவரை பிரசாரம் செய்யவைக்க வேண்டும் எனக் கூறினார்கள்.

பிறகு, ஒரு சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் வேடமிட்டு, திறந்தவெளி ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் என நகர் முழுவதும் வலம் வந்து வாக்கு கேட்டனர். அடுத்து, ஜெயலலிதா அம்மா வேடத்தில் பெண் ஒருவர் வந்து வாக்கு கேட்பார், அதன்பிறகு எங்க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என உற்சாகமாகக் கூறிவந்தனர் தொண்டர்கள். ஆனால், பிரசாரத்திற்கு நாளைதான் கடைசி நாள். ஜெயலலிதா இருந்தபோது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வந்து, செய்வீர்களா... செய்வீர்களா என கேட்டால் போதும் கூட்டம் மொத்தமும் செய்வோம் என கோரஸாகக் கத்துவார்கள். இப்போது அந்தக் குரலை கேட்க முடியவில்லை. அது ஒரு வருத்தம் என்றால், தஞ்சாவூரில் ஜெயலலிதாவையே மறந்துவிட்டது வருத்தமாக உள்ளதாக, கட்சியின் சீனியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கட்சியினரிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆர் எங்களுக்கு தலைவன் என்றால், ஜெயலலிதா எங்களுக்குத் தலைவி என்பதையும் தாண்டி அம்மா என அழைத்து தெய்வமாக வணங்கிவருகிறோம். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு எத்தனையோ சோதனைகளைக் கடந்து, அ.தி.மு.க ஆலமரம் போல இருக்க உழைத்தவர். தனக்குப் பிறகும் இந்த இயக்கம் வாழும்; யாராலும் எதுவும் செய்ய முடியாது என கம்பீரக் குரலில் முழங்கினார். ஆனால், அவர் மறைந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். எங்க கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமிட்டவர்கள் வாக்கு கேட்டனர். அப்போதே, நாங்க அம்மா ஏன் வரலை என்று கேட்டோம், வருவார் என்றார்கள். அவர் வடிவில் வந்து கேட்டால், கூடுதலாக வாக்குகள் கிடைக்கும். ஆனால், அதற்குள் மறந்துவிட்டனர்'' எனத் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க