`ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்கு தொடர்வேன்!' - ஓ.பி.எஸ் பேட்டி | Will file case against EVKS Elangovan, says OPS

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (15/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (15/04/2019)

`ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்கு தொடர்வேன்!' - ஓ.பி.எஸ் பேட்டி

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்கு ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் மணல் சப்ளை செய்கின்றனர்” என குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அ.தி.மு.க தேர்தல் பணி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ``அ.தி.மு.கவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதுபோன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவுவது நம்பத்தகுந்தது அல்ல. கருத்துக்கணிப்புகளை மட்டுமே வைத்து முடிவு எடுக்க முடியும் என்றால், தேர்தல் நடத்தத் தேவையில்லை. கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டது. ஆனால், அ.தி.மு.க வெற்றிபெற்றது” என்றார்.

`மேக்கே தாட்டூ அணை கட்ட நீங்களும், உங்கள் மகனும் கர்நாடகத்திற்கு மணல் சப்ளை செய்வதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறுகிறாரே?' எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``அவருடைய குற்றச்சாட்டு பொய். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது” என்றார்.

முன்னதாக, ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன்மீது இப்படி ஒரு குற்றசாட்டு வைக்கிறீர்களே, அதற்கான ஆதாரம் இருக்கிறதா என ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``ஆதாரம் இருக்கிறது. அவர்கள் என்மீது வழக்கு தொடுக்கட்டும், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்” என்று பதில் கொடுத்திருந்தார்.