`பணம் வந்து சேரல!' - குமுறும் குரலால் வேட்பாளர்கள் அதிர்ச்சி! | DMK candidates express displeasure over money distributing

வெளியிடப்பட்ட நேரம்: 21:44 (15/04/2019)

கடைசி தொடர்பு:21:44 (15/04/2019)

`பணம் வந்து சேரல!' - குமுறும் குரலால் வேட்பாளர்கள் அதிர்ச்சி!

ஏப்ரல் 18-ம் தேதி, தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் பிரசாரமும் முடிவடைய உள்ளது. வேட்பாளர்களும் தொண்டர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

தமிழகத் தேர்தல் களம் என்பது பிரசாரம், கொள்கை, வேட்பாளரின் நடத்தை இவற்றை மட்டும் வைத்து முடிவுசெய்த காலம் மாறி, கரன்சியை வைத்து களத்தை முடிவுசெய்யும் நிலைக்கு மாறிவிட்டது. அந்த தந்திரம் தெரிந்த ஆளும்கட்சி நிர்வாகிகள், பிரசாரம் ஓய்வதற்கு முன்பே, கரன்சியைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிடும் முடிவில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார்கள். மக்களவைத் தொகுதிகளில் வாக்குக்கு 300 முதல் 500 ரூபாய் வரையும், இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்குக்கு 2000 ரூபாயும் பட்டுவாடா சிறப்புடன் நடந்துவருகிறது.

அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வோ, இன்னும் பணத்தை பங்கிட்டுக் கொடுக்காமல் காலம் தாழ்த்திவருவதாகக் குமுறுகிறார்கள் நிர்வாகிகள். வி.ஐ.பி தொகுதிகளும், வாரிசுகள் போட்டியிடும் இடங்களில் மட்டும் பணப் பட்டுவாடாவை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் வந்து சேராததால், வாக்காளர்கள் பலரும் தி.மு.க நிர்வாகிகளிடம் பணம் எங்கே என்று கேட்கும் பரிதாபம், தமிழகத் தேர்தல் களத்தில் நிலவிவருகிறது. பணம் எங்கே என்று தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டால், `பணம் எல்லா தொகுதிகளுக்கும் வந்து, அது மாவட்டம், நகரம், ஒன்றியம் என்று பிரித்துக் கொடுக்கும் பணி கடந்த இரண்டு நாள்களாக நடந்துவந்தது. அ.தி.மு.க கொடுத்து முடித்த பிறகு கொடுக்கலாம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை வாக்காளர்கள், பணம் எவ்வளவு என்று நிர்வாகிகளிடம் லிஸ்ட் வாங்கினார்கள்.

ஆனால், கீழ்மட்ட நிர்வாகிகளுக்குப் பணம் வந்து சேரவில்லை. மேலிருந்து பணம் கீழே வரவர, கரைந்துகொண்டே வந்துள்ளது. இதனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை. சில இடங்களில்  பாதிக்குப் பாதி என்கிற கணக்கில் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாள்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதுவரை பல இடங்களுக்குப் பணம் போய்ச் சேரவில்லை. வந்தவரை லாபம் என்று நிர்வாகிள் பலரும் பணத்தை சுருட்டிக்கொள்வதால், வாக்காளர்கள் எங்களிடம்  கேட்கும்போது பதில் சொல்ல முடியாமல் திணறுகிறோம். பணம் கொடுக்காமல் போனால், ஜெயிக்கிற தொகுதியில்கூட இறுதிக்கட்டத்தில் ஏடாகூடமாகிவிடும். இதை யாரிடம் சொல்லி தீர்ப்பது என்று புரியவில்லை” என்கிறார்கள் தி.மு.க-வின் அடிமட்ட நிர்வாகிகள்.

தி.மு.க

பல இடங்களில் பணம் போய்ச் சேராமல் இருப்பதால், தி.மு.க வேட்பாளர்களும் கிலியில் இருக்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்காரர்கள் கடைசி நேரத்தில் இப்படிச் செய்வது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைமைக்கு இதுகுறித்து சில வேட்பாளர்கள் புகார் சொல்லிய பிறகு, மாவட்டச் செயலாளர்களுக்கு டோஸ் விழுந்துள்ளது. உடனே, அவர்கள் பங்குத் தொகையை எடுத்துக்கொண்டு கீழே அனுப்பியுள்ளார்கள் என்கிறார்கள்.

பணப்பட்டுவாடா குறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம். `இந்தத் தேர்தலில் அ.தி.மு.க மட்டுமே பணப்பட்டுவாடா செய்துவருகிறது. எங்கள் தரப்பில் இருந்து பணப்பட்டுவாடா எதுவும் செய்யக் கூடாது என தலைவர் ஸ்டாலின் சொல்லிவிட்டார். தி.மு.க ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைச் சொல்லி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீதுள்ள மக்களின் அதிருப்தியும், இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. நாங்கள் பணப்பட்டுவாடா செய்வதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை' என்கிறார்கள்.