Published:Updated:

`கனிமொழி வெற்றிக்கு எதிரான சதி இது!' - `முரட்டு பக்தர்' குடும்பம் மீது அதிர்ச்சிப் புகார்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க-வைச் சேர்ந்த கீதாஜீவனின் சகோதரரின் கட்சி களம் இறங்கி இருப்பது கனிமொழியைக் கவலை அடைய வைத்திருக்கிறது. தி.மு.க வாக்குகளைக் குறிவைத்து அவர் பிரசாரம் செய்த போதிலும், அதைத் தடுக்க கீதாஜீவன் தரப்பினர் முயற்சி மேற்கொள்ளாதது குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

`கனிமொழி வெற்றிக்கு எதிரான சதி இது!' - `முரட்டு பக்தர்' குடும்பம் மீது அதிர்ச்சிப் புகார்
`கனிமொழி வெற்றிக்கு எதிரான சதி இது!' - `முரட்டு பக்தர்' குடும்பம் மீது அதிர்ச்சிப் புகார்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க-வைச் சேர்ந்த கீதாஜீவனின் சகோதரரின் கட்சி களம் இறங்கி இருப்பது கனிமொழியைக் கவலை அடைய வைத்திருக்கிறது. தி.மு.க வாக்குகளைக் குறிவைத்து அவர் பிரசாரம் செய்தபோதிலும், அதைத் தடுக்க கீதாஜீவன் தரப்பினர் முயற்சி மேற்கொள்ளாதது குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாகக் கனிமொழி, பா.ஜ சார்பாகக் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆளுமை மிகுந்த இரு பெண் தலைவர்கள் களம் இறங்கியிருக்கும் தூத்துக்குடி தொகுதியில் இரு முனைப்போட்டி கடுமையாக இருக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாகிச்சூட்டில் 13 அப்பாவி உயிர்கள் பலியான விவகாரம், தாது மணல் கொள்ளை, தாமிரபரணி நதி நீர் பிரச்னை, தீப்பெட்டித் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சிக்கல், உப்பளத் தொழிலாளர் மற்றும் மீனவர் பிரச்னை என இடியாப்பச் சிக்கல்கள் மிகுந்த இந்தத் தொகுதியில் வெற்றிக்காகக் கனிமொழியும் தமிழிசையும் கடுமையாகப் போராடி வருகிறார்கள். 

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், அ.ம.மு.க வேட்பாளரான புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சியின் கிறிஸ்டண்டைன் ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொன் குமரன் ஆகியோர் கணிசமாக வாக்குகளைப் பிரிப்பதால் தி.மு.க-வுக்குp பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், தி.மு.க-வின் முன்னாள் செயலாளரும் கலைஞரின் முரட்டுப் பக்தர் என வர்ணிக்கப்பட்டவருமான என்.பெரியசாமியின் மகன் என்.பி.ராஜா தொடங்கியிருக்கும். `நாம் இந்தியர் கட்சி’ வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கும் பேரூரணி ஜெயகணேஷ் தி.மு.க-வின் வாக்குகளைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ-வுமான கீதாஜீவன் தன்னுடைய சகோதரரிடம் பேசி வாக்குகள் பிரிவதைத் தடுத்திருக்க வேண்டும் எனக் கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள். 

யார் இந்த என்.பி.ராஜா?

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வை தன் விரல் அசைவில் வைத்திருந்தவர், மறைந்த மாவட்டச் செயலாளரான என்.பெரியசாமி. 36 வருடங்களாகத் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பெரியசாமியின் மகன் என்.பி.ராஜா. இவர், முன்னாள் அமைச்சர் கீதாஜீவனின் தம்பி. வழக்கறிஞரான என்.பி.ராஜா, டிரான்ஸ்போர்ட், தேங்காய் கொப்பரை ஆலை எனப் பல தொழில்கள் செய்தார். ஆனால், எதிலும் அவரால் சோபிக்க முடியாததால் காய்கறி வியாபாரம் செய்தார். பெரியசாமி இருந்தபோதே, அவருக்கு எதிராக தே.மு.தி.க-வுக்குச் சென்ற என்.பி.ராஜாவால் அரசியலிலும் பெரிதாக வளர்ச்சியை எட்ட முடியவில்லை. 

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ’நாம் இந்தியர் கட்சி’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தினாரே தவிர, அதை அப்படியே கிடப்பில் போட்டார். சைலண்ட் மோடில் கிடந்த கட்சியை, கடந்த ஆண்டு ஆக்டிவ் மோடுக்கு மாற்றும் வகையில், கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதற்குப் பிறகும் கட்சி வேலைகள் எதுவும் நடக்காமல் இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தன்னுடைய கட்சியின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பேரூரணி ஜெயகணேஷ் என்பவரை நிறுத்தினார். 

அத்துடன், நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்பவரைக் களம் இறக்கியிருக்கிறார். கட்சியின் மாநிலச் செயலாளரான பொன்ராஜ் என்பவரை விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார். நாம் இந்தியர் கட்சியின் நிறுவனத் தலைவரான என்.பி.ராஜாவுக்கு ‘புரட்சி வேந்தன்’ என்ற அடைமொழியைக் கொடுத்து கெளரவப்படுத்தி இருக்கிறார்கள், அவரின் ஆதரவாளர்கள். பெரியசாமி இருக்கும்போதே தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவி அங்கிருந்து  தே.மு.தி.க-வில் இணைந்து சிலகாலம் இருந்தார். தே.மு.தி.க-வில் மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கைப்பற்ற முட்டிப் பார்த்தும் கிடைக்காததால் அதிலிருந்து விலகினார். பெரியசாமி இருந்த காலத்திலேயே என்.பி.ராஜாவுடன் கருத்து வேறுபாடு நிலவியது.  

தமிழைக் காக்கணும்.. இந்தியைக் கற்கணும்!

பெரியசாமியின் இறப்புக்குப் பிறகுதான் இவரது தனிக்கட்சி தொடங்கும் பணி வேகமெடுத்தது. தூத்துக்குடியில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த இக் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜா, ``தமிழகத்தில் எந்தக் கட்சியின் செயல்பாடும் சரியில்லை. பணத்தை வச்சுத்தான் கட்சிகளே இயங்குகின்றன. எங்க கட்சிக்குப் பணம் முக்கியமில்ல... தொண்டர்களோட நல்ல குணம்தான் முக்கியம். அரசியல்வாதின்னா வேஷ்டிதான் கட்டணுமா, வேஷ்டி தமிழனோட அடையாளம். அது அரசியல்வாதியோட அடையாளம் இல்ல. எங்க கட்சியில சேர்றவங்க வேஷ்டி கட்டணும்னு அவசியம் இல்ல. பேண்ட் சர்ட், கோட் போட்டுக்கலாம். ஆனா, கட்சியோட கரை துண்டை கண்டிப்பா தோளில போட்டுக்கணும். கேள்வி கேட்காம எதுவும் நடக்காது. கேட்டாத்தான் எதுவும் நடக்கும். அதனால் அதிகளவுல பேச்சாளர்களை உருவாக்கப்போறோம். வரப்போற உள்ளாட்சித் தேர்தல் முதல் எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல் வரை எல்லா தேர்தல்லயும் எங்க கட்சிவேட்பாளர்கள் நிற்பார்கள். மற்ற கட்சியில சீட்டு கிடைக்காதவர்களுக்கு எங்க கட்சியில இடம் இல்லை. தமிழை காக்கணும், இந்தியை கற்கணும்’’’ எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே மழை பெய்து கூட்டத்தை முடித்து வைத்துவிட்டது. ’நம்ம கட்சியோட முதல் கூட்டத்தை வருணபகவான் மழையாகப் பொழிந்து ஆசிர்வதிச்சுவிட்டது’ எனக் கட்சியினர் பேசிக்கொண்டனர். 

தி.மு.க வாக்குகள் பிரிகிறதா?

தூத்துக்குடியில் பா.ஜ-வும் தி.மு.க-வும் வாக்குகளைக் கவர தீவிர பிரசாரம் செய்துவரும் நிலையில், மாவட்டத்தின் முக்கியத் தலைவராக இருந்த என்.பெரியசாமியின் மகன் என்பதால் என்.பி.ராஜாவுக்கு தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது. அதனால் அவரது கட்சியின் வேட்பாளர் தி.மு.க வாக்குகளைப் பிரிப்பார் என தி.மு.க-வினர் அஞ்சுகிறார்கள். இது பற்றிப் பேசிய தி.மு.க-வினர், ``தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க-வின் வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனேயே என்.பி.ராஜா தன் கட்சியின் சார்பாக வேட்பாளரைக் களம் இறக்கியிருக்கிறார். தூத்துக்குடி தொகுதியில் கணிசமாக இருக்கும் பட்டியல் இனத்தவருக்கு எதிராகப் பேசியதால் கீதாஜீவன் மீது தொகுதிக்குள் அதிருப்தி நிலவுகிறது. இந்த நிலையில், தி.மு.க வாக்குகளை அவருடைய தம்பியின் கட்சியினர் பிரிப்பதைத் தடுக்க கீதாஜீவன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது’’ என்கிறார்கள். 

கனிமொழியின் வெற்றிகாகக் கடுமையாக உழைக்கும் தி.மு.க-வின் நிர்வாகிகள் பேசுகையில், ``இந்தத் தொகுதியில் கனிமொழிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. அவரால் எளிதாக வெற்றிபெற முடியும். ஆனால், கனிமொழி வெற்றிபெற்றுவிட்டால், தூத்துக்குடி மாவட்டத்தில் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் எனக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலரே நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் உள்ளடி வேலைகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், கட்சியினரின் இந்த உள்ளடி வேலைகள் குறித்த விவரம் கனிமொழியின் கவனத்துக்குச் சென்றுவிட்டது. அவர் இது பற்றி கட்சி மேலிடத்தில் தகவல் தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது. அதனால் தேர்தல் முடிந்ததும் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும்’’ என அடித்துச் சொல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தைப் போலவே தமிழகத்தின் மேலும் சில மாவட்டங்களிலும் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக வேலை செய்த நபர்கள் குறித்த பட்டியல் தயாராக இருப்பதால், தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் பொறுப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.