வேலூர் பாணியில் இரண்டு தொகுதிகளின் தேர்தலை நிறுத்த... இரவில் பறந்த போன்கால்! | In Vellore style, a phone call came at night to stop the elections in two constituencies

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (17/04/2019)

கடைசி தொடர்பு:20:08 (17/04/2019)

வேலூர் பாணியில் இரண்டு தொகுதிகளின் தேர்தலை நிறுத்த... இரவில் பறந்த போன்கால்!

வேலூர் பாணியில் இரண்டு தொகுதிகளின் தேர்தலை நிறுத்த... இரவில் பறந்த போன்கால்!

ப்ரல் 18-ம் தேதி தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. அதேபோல், வாக்களிப்பதற்கான நேரமும் நாளை காலை தொடங்கவுள்ளது. இந்த நிலையில், வேலூர் பாணியில் அதிரடியாக இரண்டு தொகுதிகளின் தேர்தலைக் கடைசிக்கட்டத்தில் நிறுத்துவதற்கான முயற்சி தமிழகத்திலிருந்து நடந்தேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூரில் கடந்த சில நாள்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. அவருடைய மகன் கதிர்ஆனந்த் தி.மு.க வேட்பாளராகக் களத்தில் நிற்கும் நிலையில், இந்த வருமானவரித் துறை சோதனை தி.மு.க. தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துரைமுருகன் வீட்டில் நடந்த இந்தச் சோதனையில் எந்தப் பணமும் சிக்காத நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது வருமானவரித் துறை. அப்போது கட்டுக்கட்டாகப் பணம் பிடிபட்டது. இந்தப் பணம் குறித்துத் தேர்தல் ஆணையத்துக்கு விரிவாக அறிக்கை அனுப்பியது வருமானவரித் துறை. இதைத் தொடர்ந்து வேலூரில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. சட்டத்துறை அமைச்சகத்துக்கு இதுகுறித்து கடிதம் எழுதி உத்தரவுபெற்ற பிறகு, அந்த உத்தரவை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிய தேர்தல் ஆணையம், நேற்று பிரசாரம் முடிவடைந்த பிறகு வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தியது. 

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி வீட்டில் சோதனை

பணம் பிடிபட்டதை காரணமாகச் சொல்லி இந்தப் பொதுத்தேர்தலில் நிறுத்தப்பட்ட முதல் தொகுதி வேலூர். இந்த நிலையில், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வீட்டுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். இது, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வருமானவரித் துறை சோதனை இரண்டு மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் எந்தப் பணமும் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். இதனால், தூத்துக்குடி தேர்தலும் தள்ளிவைக்க வாய்ப்புண்டு என்ற தகவல்கள் பரவின. அதேநேரம், ஆண்டிபட்டியில் அ.ம.மு.க அலுவலகத்துக்குள் சோதனையிடச் சென்ற போலீஸார் தடுத்து நிறுத்தப்பட்டதால், அங்கு நான்கு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒரே இரவில் இத்தனை களேபரங்கள் நடந்தது தமிழகத் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் களேபரங்களுக்கு இடையே பி.ஜே.பி. போட்டியிடும் இரண்டு தொகுதிகளின் தேர்தலையும் தள்ளிவைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட விஷயம் இப்போது வெளியாகியுள்ளது.

டெல்லிக்கு நெருக்கமான பி.ஜே.பி தரப்பினர் நம்மிடம், ```கார்த்தி சிதம்பரத்துக்குச் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித் துறையின் சோதனை நடத்த வேண்டும்' என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், `எந்த `க்ளு'வும் இல்லாமல் எப்படி ரெய்டு நடத்த முடியும்' என வருமானவரித் துறை அமைதியாக இருந்துவிட்டது. ஆனால், வேலூர் தேர்தல் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, சிவகங்கையிலிருந்து டெல்லி பி.ஜே.பி அலுவலகத்துக்குத் `தேர்தலை நிறுத்துங்கள்' என்று மீண்டும் போன் சென்றுள்ளது. அதற்கு அங்கு ரெஸ்பான்ஸ் இல்லாமல் போய்விட்டது” என்கிறார்கள். 

தொகுதியில் கைப்பற்றப்பட்ட பணம்

அரசியல் கட்சிகள் ஒருபுறம் தேர்தலை நிறுத்த முயன்றது என்றால், மறுபுறம் தேனி தொகுதியின் தேர்தலை இன்று இரவுக்குள் நிறுத்த முடியுமா என வருமானவரித் துறை ஆராய்ந்து வருகிறதாம். ஆண்டிபட்டியில் பிடிபட்ட பணத்தின் உரிமையாளர் கொடுத்த வாக்குமூலத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரித் துறை அனுப்பியுள்ளது. இந்த அடிப்படையில், அங்குத் தேர்தலை நிறுத்தினால் என்ன என்று வருமானவரித் துறை தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. நாளை காலை வாக்கு செலுத்துவதற்குமுன் வேறு என்னென்ன களேபரங்கள் நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்