Published:Updated:

திருநெல்லியில் ராகுல் சுவாமி தரிசனம் ஏன்? - பின்னணியில் உள்ள சோகமான ஃப்ளாஷ் பேக்

திருநெல்லியில் ராகுல் சுவாமி தரிசனம் ஏன்? - பின்னணியில் உள்ள சோகமான ஃப்ளாஷ் பேக்
திருநெல்லியில் ராகுல் சுவாமி தரிசனம் ஏன்? - பின்னணியில் உள்ள சோகமான ஃப்ளாஷ் பேக்

இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று வயநாட்டில் உள்ள திருநெல்லி கோயிலில் சுவாமி தரிசனம்செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வரும் ஏப்ரல் 23-ம் தேதி, கேரளாவில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளதையொட்டி, அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் ராகுல் காந்தி. நேற்று, இன்று ஆகிய இரு தினங்களும் கேரளாவின் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கொல்லம், வயநாடு ஆகிய பல இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்துவருகிறார். 

இந்நிலையில், இன்று காலை முண்டு என அழைக்கப்படும் கேரளாவின் பாரம்பர்ய உடை அணிந்தபடி, வயநாட்டில் உள்ள மகா விஷ்ணு கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் ராகுல் காந்தி.  மேலும், கோயிலுக்கு அருகில் உள்ள பாபநாஷினி நதியில், சில மதச் சடங்குகளையும் செய்தார். இது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நடந்த வழிபாடு என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதற்குப் பின்னால் ஒரு சோகமான கதையும் உள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது, தற்கொலைப்படை தாக்குதலால் கொலைசெய்யப்பட்டார். இதையடுத்து, அவரின் உடல் எரியூட்டப்பட்டது. தொடர்ந்து, ராஜீவ் காந்தியின் அஸ்தியை தென் இந்தியாவில் கரைக்க புண்ணிய நதி தேடப்பட்டது. அப்போது, கேரள மாநிலம் வயநாடு, திருநெல்லியில் உள்ள பாபநாஷினி நதியில் அவரின் அஸ்தி கரைக்கப்பட்டது. இதன் காரணமாகவே, ராகுல் காந்தி இன்று பாபநாஷினி நதிக்குச் சென்று, தன் தந்தைக்கு சிறப்பு பூஜைகள் செய்துள்ளார். 

கேரளாவில் உள்ள வயநாடு, தென் இந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. இங்கு ராகுல் காந்தி போட்டியிடும் வேளை, உண்மையான காசியில் உள்ள வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என்பது கூடுதல் செய்தி.