Published:Updated:

`வேலூர் மக்கள் மட்டும் ஓட்டு போடல!’ - கண்ணீர்விட்டு அழுத ஏ.சி.சண்முகம்

`வேலூர் மக்கள் மட்டும் ஓட்டு போடல!’ - கண்ணீர்விட்டு அழுத ஏ.சி.சண்முகம்
`வேலூர் மக்கள் மட்டும் ஓட்டு போடல!’ - கண்ணீர்விட்டு அழுத ஏ.சி.சண்முகம்

`வேலூர் மக்கள் மட்டும் ஓட்டு போடல!’ - கண்ணீர்விட்டு அழுத ஏ.சி.சண்முகம்

‘‘மிகப்பெரிய வெற்றிக்குத் தடையாக, வேலூர் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்களிக்கும் இந்த நேரத்தில், வேலூர் மக்கள் மட்டும் ஓட்டு போட முடியவில்லை’’ என்றுகூறி, ஏ.சி.சண்முகம் கண்ணீர்விட்டு தேம்பித்தேம்பி அழுததால், தொண்டர்களும் வருத்தப்பட்டனர்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உட்பட 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் ரூ.10 கோடியே 57 லட்சம் ரொக்கப் பணம் மூட்டை மூட்டையாக ஐ.டி ரெய்டில் சிக்கியதால், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்துசெய்தது. இதனால், வேட்பாளர்கள் மட்டுமின்றி வாக்காளர்களும் அதிர்ந்துபோயினர்.

இந்த நிலையில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனும், ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் ஏ.சி.சண்முகமும் இன்று காலை வாக்களித்தனர். ஓட்டு போட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம், ‘‘இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில், வேலூர் தொகுதி மக்கள் மட்டும் வாக்களிக்கவில்லை. மோடிக்கு வலிமை சேர்க்கக்கூடிய வேலூர் தேர்தலை நிறுத்தியிருக்கிறார்கள். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்போகிறோம்.

மே 19-ம் தேதி நடைபெறும் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுடன், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு தீர்ப்பு கிடைக்கவில்லை. மிகப்பெரிய வெற்றிக்குத் தடையாகத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளது’’ என்று கூறிய அவர், திடீரென கண்ணீர் விட்டுத் தேம்பித்தேம்பி அழுதார். அருகிலிருந்த தொண்டர்களும் கண்கலங்கி வருத்தப்பட்டனர். ஏ.சி.சண்முகத்தை சமாதானம் செய்தனர். அதன்பிறகு, அவர் அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த கட்டுரைக்கு