Published:Updated:

``ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்; நிச்சயம் போட்டியிடுவேன்!” - ரஜினிகாந்த் பேட்டி

சத்யா கோபாலன்
``ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்; நிச்சயம் போட்டியிடுவேன்!” - ரஜினிகாந்த் பேட்டி
``ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்; நிச்சயம் போட்டியிடுவேன்!” - ரஜினிகாந்த் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. முதலில் வாக்களிப்பவர்கள், முதியவர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரும் ஆர்வமாகத் தங்களின் வாக்கைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் `பேட்ட’ படத்தைத் தொடந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் `தர்பார்’ படத்துக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினி இன்று மும்பை புறப்பட்டார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தேர்தல் தொடர்பான பல கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

``உங்கள் அரசியல் வருகை குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனரே?’’

``அவர்களின் ஆர்வம் எனக்குப் புரிகிறது, நிச்சயமாக அவர்களை நான் ஏமாற்றமாட்டேன்.’’ 

``இந்தத் தேர்தலில் 71% சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன... உங்கள் கருத்து?’’

``71 சதவிகிதம் வாக்குப் பதிவு என்பது நல்ல விஷயம்தான். ஆனால், சென்னையில் மட்டும் 50 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. விடுமுறைக்காகப் பலரும் சொந்த ஊருக்குச் சென்றிருப்பதால் இங்கு குறைந்துள்ளதாக நினைக்கிறேன்.’’ 

``மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு உள்ளதா?’’

``தேர்தல் முடிந்து அனைத்துத் தொகுதிகளின் முடிவும் மே 23-ம் தேதி வரும், அப்போது பார்க்கலாம்.’’ 

``தேர்தலின்போது பல இடங்களில் வன்முறை நடந்துள்ளன. இதைப் பற்றிய உங்கள் கருத்து?’’

``இந்த வருடம் நடந்த வன்முறைகள் மிகவும் குறைவு. இதற்கு முந்தைய காலகட்டங்களில் இதைவிட அதிக வன்முறைகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.’’ 

``தேர்தல் களத்தில் உங்களை எப்போது எதிர்பார்க்கலாம்?’’

``எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் நான் நிச்சயம் போட்டியிடுவேன்.’’ 

``இந்த இடைத்தேர்தல் முடிந்த பிறகு, ஆட்சி மாற்றம் வந்தால் போட்டியிடுவீர்களா?’’

``சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் நிச்சயம் போட்டியிடுவேன்.’’