Published:Updated:

`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி

மலையரசு
சத்யா கோபாலன்
`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி
`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். அடுத்தபடியாக, வரும் 23-ம் தேதி, கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் ராகுல் காந்தி. கடந்த மூன்று நாள்களாக கேரளாவின் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ராகுலின் இந்த மூன்று நாள் கேரள பயணத்தின்போது, பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. இது, கேரள மக்கள் மத்தியில் ராகுலின் மதிப்பை சற்று உயர்த்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

பல சுவாரஸ்யங்களில் ஒன்றாக, ராகுல் காந்தி, ஏழு வயது சிறுவனுக்கும் மதிப்பளித்துள்ள சம்பவம் கேரள மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நேற்று முன்தினம், கேரளாவின் கன்னூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். காலை 9 மணிக்கு அவர் கன்னூர் வருவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பல மணி நேரங்கள் முன்னதாகவே அங்கு மக்கள் கூடத் தொடங்கினர். அவர்களுடன்  5மணி நேரம் முன்பாகவே கையில் ஒரு கடிதத்துடனும், தன் சட்டைப் பையில் ராகுல் படத்தைக் குத்தியவாறும் ஏழு வயது சிறுவன் நந்தனும் காத்திருந்தான். அவன், தன்னை ராகுலின் ரசிகன் எனக் கூறினான்.

சுமார்  5 மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, காலை  9 மணிக்கு ராகுல் பொதுக்கூட்டத்துக்கு வந்து பேசிமுடித்துவிட்டுச் சென்றுவிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுலை சந்திக்க சிறுவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த நந்தன் அழத்தொடங்கியுள்ளான். மிகவும் கடினமான மனதுடன் வீட்டுக்குச் சென்றுள்ளான். பின்னர், சிறுவன் பற்றிய தகவல்களையும் அன்று நடந்தவற்றையும் நந்தனின் தந்தை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது, கேரள சமூக வலைதளத்தில் வைரலாகத் தொடங்கியது. பின்னர், இந்தப் பதிவை மீடியாக்கள் செய்தியாக்க, அதைப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ராகுல் காந்தியின் வயநாடு ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கேரளாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், நந்தன் பற்றிய தகவலை ராகுல் காந்திக்கு தெரிவித்துள்ளார். அடுத்த சில நொடிகளில், நந்தனுடைய தாயின் போன் கால் ரிங் ஆகியுள்ளது. அதை எடுத்துப் பேசும்போது, மறுமுனையில் ராகுல் காந்தியின் குரல். ``ஹாய் நான் ராகுல் காந்தி பேசுகிறேன். உங்கள் மகனிடம் பேச முடியுமா?" என ராகுல் காந்தி கேட்க, உடனடியாக அவர், சிறுவன் நந்தனிடம் கொடுத்து பேசவைத்துள்ளார். தான் நேசித்த தலைவரின் குரல் கேட்ட சிறுவன் நந்தனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. இருப்பினும், மறுமுனையில் இருந்த ராகுல், நந்தனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, ``அடுத்த முறை கேரளா வரும்போது உன்னை நிச்சயமாகப் பார்க்கிறேன். இந்த சிறிய ரசிகனை நான் நிறைய நேசிக்கிறேன். பார்ப்போம்" என உறுதி கூறிவிட்டு வைத்துவிட்டார். 

தான் பார்க்க ஆசைப்பட்ட ராகுல் காந்தி, தன்னுடன் பேசிய குஷியில் இருந்த நந்தன், ``ராகுல் ஜி, இன்றைக்கு நான் தான் ட்ரெண்டிங். இது உங்களால்தான் கிடைத்தது. உங்களுக்குத் தெரியுமா... நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்று? இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். லவ் யூ ராகுல் ஜி" எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். சிறுவனின் ஆசையைப் பூர்த்திசெய்வதற்காக ராகுல் போன் செய்து பேசியது, அவர் மீதான நன்மதிபு கேரளாவில் அதிகரித்துள்ளது.