வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு! | Election voter machine safety officer Fainted

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (19/04/2019)

கடைசி தொடர்பு:21:00 (19/04/2019)

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு!

தஞ்சாவூரில், வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கிவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்  நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குகள்  பதிவான இயந்திரங்கள், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர்  பெண்கள் கல்லூரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.சீலிடப்பட்ட இந்த அறைகளுக்கு வெளியே, துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்தக் கல்லூரியில் வருவாய்த் துறையினர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று  குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனிசௌந்தர்யா, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர், தரை தளத்தில் இருந்து முதல் தளத்தில் உள்ள அறைக்குச் செல்வதற்காக நடந்துசென்றார். அப்போது, திடீரென மயங்கிக் கீழே விழுந்தார். உடனே அங்கு பணியில் இருந்த மற்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததோடு, ஜனனிசௌந்தர்யாவை தூக்கி அமர வைத்து தண்ணீர் தெளித்தனர்.  அதனால், மயக்கம் தெளிந்து எழுந்தார். இதையடுத்து, அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர்கள், ஜனனிசௌந்தர்யாவைப் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவர் பணியில் ஈடுபட்டதால் மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறி முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

 

இந்தத் தகவலை அறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரியும் கலெக்டருமான அண்ணாதுரை, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜெகதீஸ்வரர் ஆகியோர் வந்து முதலுதவி சிகிச்சை பெற்ற  ஜனனிசௌந்தர்யாவைப் பார்த்து ஆறுதல் கூறினர்.  இதனால், கல்லூரி வளாகம்  சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க