Published:Updated:

`தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பிரகாசமாக இருக்கிறது!' - தேர்தல் முடிவைக் கணிக்கும் ஜி.ராமகிருஷ்ணன்

பி.ஆண்டனிராஜ்
`தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பிரகாசமாக இருக்கிறது!' - தேர்தல் முடிவைக் கணிக்கும் ஜி.ராமகிருஷ்ணன்
`தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பிரகாசமாக இருக்கிறது!' - தேர்தல் முடிவைக் கணிக்கும் ஜி.ராமகிருஷ்ணன்

``தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் மத்தியில் மட்டுமல்லாமல் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்'' என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.  

ரஷ்யப் புரட்சியாளரான லெனினின் 149-வது பிறந்தநாள் விழா, நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஜி.ராமகிருஷ்ணன், அங்குள்ள பிரமாண்டமான லெனின் சிலைக்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஏழு கட்டங்களாக நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை இரண்டு கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், பாண்டிச்சேரி தொகுதியிலும் தேர்தல் முடிந்துள்ளது. இதுபோன்று, தமிழகத்தில் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளன. 

இந்த  நிலையில், மீதமுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் மே 19-ம்தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில்,  மத்தியில் மட்டுமல்லாமல்  மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் மோடி மற்றும் அ.தி.மு.க-வுக்கு எதிரான அலை இருப்பதால், ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. 

தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுரையில் மட்டும் ஒரு அதிகாரி பாதுகாக்கப்பட்ட அறைக்குள் எப்படிச் சென்றார்? இது, பல சந்தேகங்களை எழுப்புகிறது. இதற்காக, அந்த அதிகாரி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம். 

இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு, உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தக் கொடூர சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகவும் கண்டனத்தைப் பதிவுசெய்கிறோம்’’ என்று தெரிவித்தார். பேட்டியின்போது, நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சி.ஐ.டி.யு தொழிற்சங்கச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.