`போலி ஏஜென்டுகள்; போலி குழு; போலி அறிக்கை!' - களநிலவரத்தை உணர்ந்தாரா ஸ்டாலின்?  | DMK cadres shocked over election field work status

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (24/04/2019)

கடைசி தொடர்பு:14:37 (24/04/2019)

`போலி ஏஜென்டுகள்; போலி குழு; போலி அறிக்கை!' - களநிலவரத்தை உணர்ந்தாரா ஸ்டாலின்? 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 65 மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றாகத் தேர்தல் வேலை பார்த்தனர். இப்போது 4 தொகுதிகளிலும் பிரிந்து சென்று வேலை செய்யப் போகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இதில், தலைமையின் கணக்கும் வேறு மாதிரியாக இருக்கிறது.

`போலி ஏஜென்டுகள்; போலி குழு; போலி அறிக்கை!' - களநிலவரத்தை உணர்ந்தாரா ஸ்டாலின்? 

அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ``நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது சட்டமன்றத் தொகுதிகள் மீதுதான். அந்த அக்கறை ஸ்டாலினுக்கு இருப்பதாகத் தெரியவில்லை" என வேதனைப்படுகின்றனர் உடன்பிறப்புகள். 

நாடாளுமன்றத் தேர்தல் பிளஸ் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துவிட்டது. வரும் மே 19-ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக நேற்று வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. தி.மு.க தரப்பில் தொகுதிக்கு 15 நிர்வாகிகள் எனப் பெரும்படையைக் களத்தில் இறக்கியுள்ளனர். அ.தி.மு.க தரப்பிலும் அமைச்சர்கள் பட்டாளத்தை நியமித்துள்ளது. தமிழக சட்டமன்றத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், 18 தொகுதிகளோடு சேர்த்து 4 தொகுதிகளுக்கான வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், தினகரன் தலைமை இந்தத் தேர்தல் மூலம் வலுவடையுமா என்ற எதிர்பார்ப்பும் அ.ம.மு.க வட்டாரத்தில் இருக்கிறது. 

ஸ்டாலின்

``ஸ்டாலின் தலைமையைத் தீர்மானிக்கக் கூடிய மிக முக்கியமான தேர்தல் இது. ஆனால், அதற்கான முனைப்பு சற்றும் இல்லை. 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரிதாக எந்த வேகத்தையும் காட்டவில்லை. பொதுவான தேர்தலாகத்தான் இதைப் பார்த்தது தி.மு.க தலைமை. கடந்த 10 ஆண்டுகளாகத் தேர்தலில் பணம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. அரசியல்வாதிகள் கொடுக்கும் பணத்தின் மீதுதான் மக்களின் பார்வை உள்ளது. இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர், அதனால் பணத்தை வாங்கிவிட்டுத் தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டுள்ளனர் என சீனியர் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் தேர்வு தி.மு.கவா, மக்கள் நீதி மய்யமா, நாம் தமிழர் கட்சியா என்பதெல்லாம் வாக்கு எண்ணிக்கை நாளில்தான் தெரிய வரும். தேர்தல் முடிந்த பிறகு களநிலவரம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஸ்டாலினிடம் நிர்வாகிகள் சிலர் எடுத்துக் கூறியுள்ளனர். அப்படியும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் சரியாகக் கவனம் செலுத்தவில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது. இதைப் பற்றி அவரிடம் துணிச்சலாகக் கருத்துச் சொல்வதற்கும் யாரும் தயாராக இல்லை. அப்படிச் சொல்பவர்களையும் விரோதியாகப் பார்க்கிறார் ஸ்டாலின்" என ஆதங்கத்தோடு விவரித்த தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சிலர். 

ஸ்டாலின்

``நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் வேலைகள் திருப்தியாக இல்லை. தொகுதிக்கு 15 பேர் என நியமித்திருக்கிறார் ஸ்டாலின். `தலைமை கூறிவிட்டது. தொகுதியைப் பார்த்துக் கொள்ளலாம்' என முடிவெடுத்து அந்தந்த தொகுதிகளில் தங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கின்றனர். காலை, மாலை, இரவு என ஒவ்வொரு நேரத்துக்கான மெனுவில் என்ன இருக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானித்துவிட்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 65 மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றாகத் தேர்தல் வேலை பார்த்தனர். இப்போது 4 தொகுதிகளிலும் பிரிந்து சென்று வேலை செய்யப் போகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஒவ்வொரு தொகுதிக்கான திட்டம் என்ன என்பது பற்றி எதுவும் பேசப்படுவதில்லை. தலைமையின் கணக்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. `40 மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெற்றுவிடுவோம். இதைத் தொடர்ந்து வருகிற 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வென்றுவிடுவோம். மக்கள் மனநிலையில் மாற்றம் வந்துவிட்டது' என்ற மிதப்பில் உள்ளனர். மக்களின் மனநிலை மாறி நீண்டகாலம் ஆகிவிட்டது. 

ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பி.எல்.ஏ (Booth level Agent) 1, பி.எல்.ஏ 2 என்ற கணக்கில் ஆட்களை நியமித்தனர். அவர்களது வேலை, ஒவ்வொரு பூத்திலும் உள்ள வாக்குகளைக் கணக்கெடுக்க வேண்டும். இதில், கட்சி வாக்குகள், நடுநிலை வாக்குகள் என்ற புள்ளி விவரத்தைச் சேகரிக்க வேண்டும். அதில் நடுநிலை வாக்காளர்களை தி.மு.க. பக்கம் கொண்டு வர வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ள வக்கீல்கள் குழு ஒன்றை அனுப்பினார் ஸ்டாலின். ஆனால், ஓரிடத்தில்கூட சரியான வேலை நடக்கவில்லை. இப்போது தேர்தல் முடிந்த பிறகு, `என்னுடைய தொகுதியில் ஆயிரம் வாக்குகளைக் காணவில்லை, 5,000 வாக்குகளைக் காணவில்லை' என்கிறார்கள். `தி.மு.க. ஓட்டு இருக்கிறதா?' என்றே ஆய்வு செய்யாதவர்கள், நடுநிலை வாக்காளர்களையா தேடிப் போய்ப் பார்த்திருப்பார்கள். பி.எல்.ஏ ரிப்போர்ட் என்ற பெயரில் தலைமைக்குக் கொடுத்த அறிக்கையும் போலி என்பது இப்போது தெரியவந்துள்ளது. 

ஸ்டாலின்

தலைமை அனுப்பிய குழுவினர், மாதக் கணக்கில் தங்கி வேலை பார்த்ததாகச் சொல்லப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் 20 பேரை நியமித்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை, `ஒவ்வொருவரும் 50 வாக்காளர்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்றார்கள். இந்த 20 பேரும் போலியானவர்கள் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களையெல்லாம் பூத் கமிட்டி லிஸ்ட்டில் சேர்த்துவிட்டனர். டீயும் பன்னும் சொந்தக் காசில் சாப்பிட்டு உழைத்த தொண்டர்கள் இருந்த காலம் போய், `கூலி எவ்வளவு?' எனக் கேட்கும் தொண்டர்கள் பெருகிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் ஒரு பூத்துக்கு 5,000 ரூபாய் கொடுத்தனர். அதை 20 பேருக்கு எனப் பிரித்தால் தலா 250 ரூபாய் வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள மொத்த உறுப்பினர்கள் பெயரையும் சேர்த்து பணத்தைப் பதுக்கிக்கொண்டனர். இதற்குக் காரணம், மக்களோடு பணியாற்றுகின்ற கிளைகள் இல்லாததுதான். இன்றைய தலைவர் விரும்புகின்ற மாவட்டச் செயலாளர்கள், அவர்களுக்கு ஒத்துவரக் கூடிய ஒன்றியச் செயலாளர்கள், அவர்களை எதிர்த்துப் பேசாத கிளைச் செயலாளர்கள் இருப்பதுதான் இவ்வளவு சீர்கேடுகளுக்கும் காரணம். 18 சட்டமன்றத் தொகுதிகளைவிடவும் கூடுதல் அலட்சியத்தோடு 4 தொகுதிகளைக் கவனிக்கிறார் ஸ்டாலின்" என வேதனைப்பட்டவர்கள், 

ஸ்டாலின்

``சூலூர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக வி.பி.கந்தசாமி களமிறங்குகிறார். வதம்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர். மக்களிடம் நல்ல பெயரை வாங்கி வைத்திருக்கிறார். பொங்கலூர் பழனிசாமிக்குக் கட்சிக்காரர்களே எதிராக உள்ளனர். மீண்டும் அவர் வந்துவிடக் கூடாது என்பதில் கொங்கு மண்டல உடன்பிறப்புகள் உறுதியாக உள்ளனர். ஒட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடும் மோகன், வீரன் சுந்தரலிங்கம் வகையறாவைச் சேர்ந்தவர். சமூக பலமும் அவருக்குக் கை கொடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தி.மு.க வேட்பாளர் முருகையா பாண்டியனின் வெற்றிக்காகக் கட்சிக்காரர்கள் கடுமையாக உழைக்கின்றனர். இருப்பினும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராட வேண்டியது வரும்.

அரவக்குறிச்சி மட்டும்தான் கொஞ்சம் நம்பிக்கையளிக்கக் கூடிய தொகுதியாக இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் சரவணனுக்கான தேர்தல் செலவுகளை தலைமை பார்த்துக்கொள்ள இருக்கிறது. இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகள் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. தொகுதிக்கு 50 கோடி எனச் செலவு செய்யவும் அ.தி.மு.க தயாராக இருக்கிறது. தி.மு.க தரப்பில் தலா 15 கோடி வரையில் செலவு செய்யும் முடிவில் உள்ளது. உட்கட்சி மோதல், சமுதாய வாக்குகள் எனப் பல விஷயங்கள் தீர்மானிக்கக் கூடிய காரணிகளாக இருக்கின்றன. இதை உணர்ந்து தலைமை செயல்பட வேண்டும் என்பதுதான் உடன்பிறப்புகளின் விருப்பம்" என்கின்றனர் நிதானமாக.