வேலூர் தேர்தல்... மௌனம் காக்கும் தி.மு.க! | Election in Vellore... Why the DMK party is not requesting the Election Commission?

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (25/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (25/04/2019)

வேலூர் தேர்தல்... மௌனம் காக்கும் தி.மு.க!

"அமைச்சரின் வீட்டில் பணத்தை எடுத்தபோதே அ.தி.மு.க வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்யவில்லை. வேலூரிலோ, அந்தப் பணத்துக்கும் தி.மு.க வேட்பாளருக்கும் சம்பந்தமே இல்லை. பணம் விநியோகிக்கப்படவும் இல்லை. பிறகு எப்படி தகுதிநீக்கம் செய்வார்கள்?"

வேலூர் தேர்தல்... மௌனம் காக்கும் தி.மு.க!

.தி.மு.க கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைந்து தேர்தலை நடத்த வேண்டுமென டெல்லிக்குச் சென்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க அமைதி காக்கிறது. தேர்தலை ரத்துசெய்த தேர்தல் ஆணையமும் மௌனம் காத்துவருகிறது.

மே 19-ம் தேதி நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கப்போகிறது. அத்துடன் சேர்த்து வேலூருக்கும் தேர்தலை நடத்துங்கள் என்று தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டணி வட்டாரத்தில் பேசினோம்.   

“வேலூர் தொகுதிக்கு உடனடியாகத் தேர்தலை நடத்தும் எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அங்கு உடனே தேர்தலை நடத்துங்கள் என்று நாங்களும் கேட்கவில்லை. தேர்தல் முடியட்டும் பார்த்துக்கொள்ளலாம். தேர்தல் ஆணையம்தான் ரத்துசெய்தது. ஆணையமே அதில் முடிவுசெய்யட்டும் என்று விட்டுவிட்டோம். 

வாக்காளர்களுக்குக் கொடுக்கும் நோக்கத்துடன் பணம் வைத்திருந்தார்கள் என்பது தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் மீதான குற்றச்சாட்டு. ஆனால், பணம் கொடுக்கப்படவில்லை. எதற்காகப் பணம் வைத்திருந்தீர்கள், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கலாமே ஒழிய, வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் அதை வைத்திருந்தார்கள் என்று குற்றம்சாட்டுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

வேலூர் வேட்பாளர்கள்

வேலூர், தூத்துக்குடி, தேனி ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்த வேண்டுமென்று மேலிடத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தேனி தவிர மற்ற இரு தொகுதிகளில் தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சி நடைபெற்றது. கடைசிவரை தூத்துக்குடியில் எதுவும் செய்ய முடியவில்லை. வேலூரில் முதல் நாள் ரூ.10 லட்சம் மட்டுமே கிடைத்தது. பிறகு எங்கேயோ பணத்தைப் பிடித்து தி.மு.க நிர்வாகிகள் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ஆனால், தகுதிநீக்கம் செய்ய எந்தவித அடிப்படையும் இல்லை. வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக ஒரு வேட்பாளர் கையுங்களவுமாகப் பிடிபட்டால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருந்தால், அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் தகுதி நீக்கம் என்பதே வரும். எனவே, வேலூரில் தகுதிநீக்கம் என்பதெல்லாம் நடக்காது. சட்டத்தை மீறித் தேர்தல் ஆணையத்தால் எதுவும் செய்ய முடியாது” என்றனர்.

இதுகுறித்து தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, “வேலூரில் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. இப்போது, நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. வேலூர் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை எங்கள் தலைவர் முடிவுசெய்து அறிவிப்பார்” என்றார். அவரிடம், “தி.மு.க வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென்று அ.தி.மு.க கோரியுள்ளதே?” என்று கேட்டதற்கு, “அதை எப்படிச் செய்ய முடியும்? எந்தப் பிரிவில் செய்வார்கள்? அப்படிப் பார்த்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன், மதுசூதனன் ஆகியோரைத் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். அமைச்சரின் வீட்டில் பணத்தை எடுத்தபோதே அ.தி.மு.க வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்யவில்லை. வேலூரிலோ, அந்தப் பணத்துக்கும் தி.மு.க வேட்பாளருக்கும் சம்பந்தமே இல்லை. பணம் விநியோகிக்கப்படவும் இல்லை. பிறகு எப்படித் தகுதிநீக்கம் செய்வார்கள்? எதுவும் செய்ய முடியாது” என்றார்.

வேலூர் தொகுதி தேர்தல் தொடர்பாகத் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்தபோது, “வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வுசெய்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆணையம் முடிவெடுக்கும்” என்றனர். 

இந்நிலையில் டெல்லிக்குச் சென்ற வேலூர் தொகுதி அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், விரைவில் தேர்தலை நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்